பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

101


தசைகள் வளர்ந்து, இரத்தக் குழாய்களின் வழியை அடைத்துக் கொள்வதால், இரத்தம் மிகவும் திக்கித் திணறியே ஓட வேண்டியிருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு இரத்த அழுத்த நோய் (Blood Pressure), உண்டாகிவிடுகிறது.

நல்ல பலத்துடன், நலத்துடன் உள்ள இதயமானது, ஓய்வுடன் கூடிய உழைப்பு (Reduced heart Rate) இரத்தக் குழாய்கள் தசைகளில் செழித்து வளர்தல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் இவற்றால் பயிற்சி செய்பவர்களை இளமையாக வாழச் செய்கிறது.

வயது ஏறினாலும் தொடர்ந்து, சீராகப் பயிற்சி செய்து வருபவர்களுக்கு இதய நோய் வர வாய்ப்பேயில்லை.

இதயத் திசுக்களுக்கு உயிரூட்டமுள்ள பிராணவாயு நிறைய வந்து கொண்டேயிருந்தால், இதயநோய் வரவே வராது.

இதயத்தைப் பாதிக்கும்படி நாம் செய்துவிட்டால், நோய் மட்டுமா ஏற்படுகிறது? நோய் வந்து நொந்துபோவதுடன், நளினமிக்க இளமையும் அல்லவா நாசமாகிப் போகிறது!

இதயத்தைப் பாழடிக்கக் கூடிய கெட்டப் பழக்கங்கள் பல உள்ளன.

உணவுப் பழக்கத்தில் தரமின்மை, பரம்பரைநோய், புகைத்தல், மது அருந்துதல், ஊளைச் சதை வந்துவிடுதல், உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்கள் இதயத்தைப் பாதிக்கின்றன.

இவை எல்லாம் இருந்தால்தான் இதயம் பாதிக்கப்படுமா என்றால் அப்படி அல்ல. ஏதாவது ஒரு கெட்டப்பழக்கம் அளவுக்கு மீறிப்போகும்போது கூட, அந்த அவல நிலை ஏற்படலாம்.