உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பதிற்றுப்பத்து தெளிவுரை


29. வெண்கை மகளிர் !

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்கை மகளிர். இதனாற் சொல்லியது:குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: ’வரம்பில் தானை பரவா ஊங்கென’ எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறியதனால் வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று. வெறுங்கையராய் மகளிர் வெண்குருகு ஒப்புவர் என்பதனை, 'வெண்கை மகளிர் வெண்குருகு ஒப்பும்’ எனக் கூறிய நயம்பற்றி இப்பாடல் இத்தலைப்பைப் பெற்றது.]

அவலெறி உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தாள் நாரை யிரிய அயிரைக்
கொழுமீன் ஆர்கைய மரந்தொறுங் குழாஅலின் 5

வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
அழியா விழவின் இழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும்
அகன்கண் வைப்பின் நாடுமன் அளிய 10

விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
வரம்பில் தானை பரவா வூங்கே. 15

தெளிவுரை: அவலிடித்த உலக்கையினைப் பக்கத்தேயிருந்த வாழைமரத்திலே சார்த்திவிட்டு, வளையணிந்த கையினைக் கொண்டவரான இளமகளிர், வள்ளைப்பூவைச் சென்று கொய்வார்கள். இத்தகைய வளமுடைய, வளைந்த நெற்கதிர்களையுடைய விளைவயல்களிற் பரவியிருந்து மேய்கின்ற பெரிய கால்களையுடைய நாரைகள், அம் மகளிர்க்கு அஞ்சி அவ்விடத்தை விட்டு அகலும். அடுத்து, அவைதாம் அவ்வயல்-