பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

99

களிற் பற்றிய அயிரைக் கொழுமீன்களை உண்பனவாக, அவ்வயல்களை அடுத்துள்ள மரங்களிற் சென்று கூட்டமாகத் தங்கியிருக்கும். வளைகளும் அணியப்பெறாத கைகளை உடையவரான சிறுமகளிர், அவ் வெண்குருகுகளை ஓட்டி விளையாடுவர். கெடாத விழாக்களிலே, சுருதி இறங்காத நரம்புக் கட்டினையுடைய யாழுடன் கூடியவரான கூத்தர்கள், பண்களை நன்றாகப் பொருந்த அமைத்து இசை எழுப்பியவராக, அவ்வூர் மன்றங்களைச் சென்றடைந்தவராக அங்குள்ள தெருக்களின் பக்கமாகப் பாடியபடி செல்வர். இத்தகைய வளத்தையும் ஆரவாரத்தையும் உடையவாயிருந்த நின் பகைவரது அகன்ற இடத்தைக் கொண்ட ஊர்களை யுடைய நாடுகள்தாம், இந் நாளிலே இரங்கத்தக்கவை ஆயினவே!

ஒன்றாக விரவிய பல்வேறு வகைப்பட்ட தானியங்களோடு குருதியைக் கலந்த பலியுணவைப் பலியாக ஏற்க விரும்புவதும், மயிரோடுங்கூடிய எருதின் தோலாற் போர்க்கப் பெற்றதும், கருமையான கண்ணை உடையதுமான போர் முரசம் கடுமையாக ஒலிக்கப், போரினை மேற்கொள்ளலை நேராகத் தானே மேற்கொண்டவனாகச் சென்று, அப்பகைவர்களது கடத்தற்கரிய கோட்டையைக் கைக்கொள்ளும், பெருமையுடைய பலவான யானைப்படைகளை உடையவனாகிய குட்டுவனான நின் எல்லையற்ற படைகள் சென்று பரவா முன்னர், அந் நாடுகள் அத்தகைய வளமுடையவாயிருந்தன. அவைதாம், இதுகாலைத் தம் அழகழிந்தவையாய் இரங்கத் தக்கவை யாயின, பெருமானே!

சொற்பொருள் விளக்கம்: அவல் - நெல்லவல். வாழை சேர்த்து - வாழை மரத்திலே சார்த்திவைத்து. வள்ளை - ஒரு வகை நீர்ப்பூ. முடந்தை - வளைவு. தடந்தாள் - பெரிய கால். இரிய - அஞ்சி அகல. மகளிர் வயற்புறங்களுள் இயங்கி வள்ளைப்பூக் கொய்ய, அவர்க்கஞ்சிய நாரைகள் பறந்து அகன்றன என்பதாம். 'அயிரைக் கொழுமீன் ஆர்கைய’ என்றது, அயிரையின் கொழுவிய மீனைத் தின்னும்பொருட்டு என்பதாம். சிறுமீன்களை இவை பற்றா என்றதுமாம். ’மரந் தொறும் குழாலின்' என்றது, வெண் குருகினம் மரங்கள் தோறும் கூடியிருத்தலின் என்றதாம். அவற்றைக் காணும் வெண்கை மகளிர் அவற்றை ஓட்டி அவை ஆரவாரத்தோடு பரத்தலைக் கண்டு மகிழ்வர் என்பதாம். 'அழியா விழவு’ கெடாத விழவு; இது விழவுகள் உரிய காலத்தே தவறாமல்