பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

பதிற்றுப்பத்து தெளிவுரை

முன் சொன்னாற்போலப் பலவகையானும் மாட்சியுற்றனை! திசையனைத்தும் விளங்கச் செய்யும் நற்குண நிறைவும், நடுவு நிலைமையும் கொண்டவன் நீ. முத்துக்களையுடைய கொம்புகளைக் கொண்ட இளங்களிறுகள் பிளிற்றொலியைச் செய்யப், போர்விருப்பம் மிக்கெழுந்தாராகச் செல்லும் நின் தூசிப் படை மறவர்கள், பகைவர் நாட்டின் முடிவிடம் வரைக்கும் செல்வர். தம் வலிமையின் கண் முற்றவும் உயர்ந்து நிற்கவும், தம் பெரிய பாணரும் கூத்தரும் முதலான சுற்றத்தார் உவப்படையவும், இவர் நாட்டுச் செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டுவந்து கொடுத்தும்: மகிழ்வர். அவ்வாறாகக் கொடுத்தும் குறைவு படாத செல்வத்தை யுடைய வளமையும், தளர்ந்த குடிகளைத் திருத்தி வளமையாக்கிய சிறந்த வெற்றியுமாகிய இவற்றை எல்லாம் எண்ணிக் காணப் புகுந்தால், இட்டு எண்ணிக் காண்பதற்கு இடப்படும் கழற்சிக் காய்களும் போதாவாகுமே! பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலிலே வல்லவனாகிய கொற்றவனே! நின் பண்புகளுள் ஒன்றைமட்டும் எண்ணி யானும் வியந்தேன், பெருமானே!

'நெடுமிடல் அஞ்சி' என்பான் நின்னொடும் போர்மேற் கொண்டான். அவன் அழியுமாறும், அவனுடைய கொடிய வலிமை கெடுமாறும், பெரிய மலைபோல விளங்கும் நின் யானைப்படையோடும் சென்று, நீதான் நாட்டுப்பகுதிகளின் வளமை கெடுமாறு பாசறையிட்டுத் தங்கினாய். பெரிய கால்களையுடைய நாரையானது தங்கித் தனக்குரிய மீனாகிய இரையைக் கவர்ந்து செல்லுகின்ற நீர்வளத்தைப் பெற்ற, வளைந்த கதிர்களைக் கொண்ட நெற்பயிரின், மூங்கிலைப்போல விளங்கும் தாள்கள் நெருங்கியிருப்பதான வயல்களையுடைய, விளைச்சல் தவறாத அவன் நாட்டையும் கைப்பற்றிக் கொண்டாய். ஒன்றானும் வகையோடு பொருந்தி நடவாத மயக்கத்தை உடையவரான பகைவர்கள், நின்னோடு செற்றம் கொண்டாடாது ஒழிந்திருக்க வேண்டும் கால அளவு வரையினும் அதனை மேற்கொள்ளாராய்த், தம் சினத்தைக் காட்டுதலே தொழிலாகக் கொண்டிருந்ததனாலே, நின்னால் அழிவெய்தினர். நீயும் அவர்களை வென்று கைக்கொண்ட தன்றி, அவர்கள் நாட்டிடத்து மக்களிடத்தே யாதும் சினங் கொண்டு, அவரைத் துன்புறுத்தாதவனாகவும் விளங்கினாய். இதுதான் பெரிதும் வியத்தற்கு உரியது, பெருமானே!

சொற்பொருள் விளக்கம்: போர்மிகு குருசில் - போர்த் தொழிலில் மிக்கு விளங்கும் தலைவனே! மாதிரம்