பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பதிற்றுப்பத்து தெளிவுரை

இறைச்சித் துண்டுகளுடனே கூடியதும், யாவரும் கண்டதும் மதிமயங்கத் தக்கதுமான, குறையாத உணவினை வழங்கு வோனே! நின் வலிமைதான், நீங்காத புதுவருவாயினை உடையதாக வாழ்வதாக!

சொற்பொருளும் விளக்கமும் : நெடுவயின் - நெடுந்துாரத்துள்ள வானம். ஒளிறு - ஒளிவிடும். மின்னு - மின்னல். பரந்தாங்கு - தோன்றி நாற்புறமும் பரவினாற்போல. மின்னல் வானத்தே தோன்றி நாற்புறமும் ஒளியோடு பரந்தாற் போலக் குட்டுவனும் சேர்நாட்டிடைத் தோன்றித் தன் மறப்புகழால் எப்புறமும் பரவிய பெருமையினன் ஆயினான் என்க. புலியுறை - புலித்தோலாற் செய்த உறை. எஃகம் - வாள்; வேலுமாம். ஏவலாடவர் - அரசனது ஏவலைச் செய்யும் ஆடவரான மறவர். வலனுயர்த்து ஏந்தல் - வலக்கையிற் பற்றி உயரத் தூக்கியபடி ஏந்தி வருதல்; இது வெற்றிப் பெருமிதத்தைக் காட்டுவது. ஆரரண் - பிறரால் எளிதிற் கடத்தற்கரிய அரண். தார் - தூசிப்படை. தகைப்பு - படை வகுப்பு. பீடு -பெருமை. மாலை - இயல்பும் ஆம். பிற்ரால் கடத்தற்கரிய பகைவரின் அரணத்தை நின் தூசிப்படையே சென்று எளிதில் கடந்து வெற்றி பெறும் என்றதாம்.

ஒதல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்பன அந்தணர்க்குரிய அறுதொழில்கள் என்பர். புரிதல் - விரும்பிச் செய்தல். வழிமொழிந்து ஒழுகி - பணிந்து நடந்து. ஞாலம் - உலகம். சான்று - நிறைந்து. நாடா நல்லிசை - ஆராயப்படாத நற்புகழ்; அனைவரும் ஏற்கும் நற்புகழ். இயல்மொழி - இயல்புடைய பேச்சு. திருந்திழை - திருத்தமான அணிகள்; இவை அணிந்த தேவியைச் சுட்டியது.

குலை - நாண். சாபம் - வில். தூங்கு துளங்கு இருக்கை - செறிந்து அசையும் பாசறை இருக்கை; மறவர் நெருக்கத்தால் பாசறைக் கூடாரமும் அசைந்தது என்க. அறை - பாசறை. குருசில் - உபகாரகுணம் உள்ளவன். ஏணி - எல்லை. இடாத ஏணி - அளவிடலாகா எல்லையுடையது. இது போருக்குரிய தயார் நிலையிலிருக்கும் பாசறையின் நிலையைக் கூறியது.

கடை அறிதல் - முடிவான எல்லையை அறிதல். ‘குரை’, அசை. வீங்கல் - பெருகல். கண்டிகும் - கண்டோம். ‘வளம் வீங்கு பெருக்கம்’ என்றது, குட்டுவன் தன் மறமாண்பால் பகைவரை வென்று பெற்ற வளமைப் பெருக்கத்தை.