உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

171


சிலப்பதிகாரப் பிரதியான ஏடு ஒன்றில் மனையறம் படுத்த காதையின் தொடக்கத்தில்,

உரைசால் சிறப்பின் அரசு விழைத்திருவின்70

என்ற அடிக்கு முன்னர்,

திருவின் செல்வியொடு பெருநில மடந்தையை
ஒருதனி யாண்ட செருவடு திண்டோள்
கரிகாற் பெரும்பெயர்த் திருமா வளவனைப்
பாலை பாடிய பரிசிலன் றெடத்து
மாலைத் தாகிய வளங்கெழு செல்வத்து
அறைந் திரட்டியும் ஆயிரங் குடிகளும்
வீறுசால் ஞாலத்து வியலணி யாகி
உயர்ந்தோ ருலகிற் பயந்தரு தானமும்
இல்லது மிரப்பு நல்லோர் குழுவும்
தெய்வத் தானமும் திருந்திய பூமியும்
ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும்
விண்ணவர் உலகின் நண்ணிடு நகரமொடு
எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த

எனவரும் அடிகள் காணப்படுதலைச் சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய உ.வே.சா. ஐயரவர்கள் அடிக்குறிப்பில் தந்துள்ளார்கள். 71 மேற்படி அடிக்குறிப்புக் கருத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் அறுபதினாயிரம் குடும்பங்களைக் கொண்டிருந்திருக்க வேண்டுமென்றும் - அறுபதினாயிரம் குடும்பங்கள் என்பது ஏறக்குறைய முந்நூறு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கலா மென்றும் கருதுகிறார் சதாசிவ பண்டாரத்தார். 72 இது 1969ம் ஆண்டின் சென்னைப் பெருநகர மக்கள் தொகைக்கு இணையானது என்றும் அவரே கூறுகிறார். 73