பக்கம்:பாற்கடல்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

251


என்னில் நேர்ந்த பெருமிதம், புல்லரிப்பு, அதேசமயம் கலவரம், அச்சத்தை வாசகனுடைய யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். அப்போ எழுதியதில் ஏதோ ஒரு சத்தியம் பேசுகிறதோ? என்று நான் வியப்புற்றதுண்டு. சிந்தனை எவ்வளவு பெரிய Lab? பேனாதான் கங்கோத்ரி.

இதையொட்டி, காளிதாஸனைச் சூழ்ந்த ஒரு கதை நினைப்பு வருகிறது. ஏற்கெனவே பலருக்குத் தெரிந்திருக்க வேண்டிய கதை. ஆயினும் தெரியாதவர்கள், தேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று தப்பித்துக்கொள்ளாமல் கூடியவரை சுருக்கமாக, நான் தெரிந்துகொண்டபடி சொல்லிவிடுகிறேன்.

போஜராஜன் நாட்டிலேயே சிறந்த ஓவியனைத் தேடி வரவழைத்து, ராணியை வரைய நியமிக்கிறான். ராணியும், அவன் கட்டளைப்படி உட்கார்ந்து 'போஸ்’ கொடுத்தாள் - நாளடைவில் ஓவியம் முற்றுப்பெறும் சமயத்தில் ஒரு சொட்டு வர்ணம் தூரிகையினின்று தற்செயலாகச் சித்திரத்தின் உள்தொடையில் தெறித்தது. ஓவியன் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சொட்டை நீக்கிவிட்டு ஓவியத் திரவியங்களைக் கடை கட்டுகையில் மீண்டும் அதே அளவில் அதே தெறிப்பு. அந்தச் சொட்டையும் நீக்கியபின் மூன்றாம் முறையும் அதே போல நிகழ ஓவியன் மிரண்டுபோய்க் காளிதாசனிடம் போய்ச் சொன்னான். அவன்தான் காளி வரம் பெற்றவனாயிற்றே! ஞான திருஷ்டியில் விஷயத்தைப் புரிந்து கொண்டு, ‘பரவாயில்லை, கவலைப்படாதே. ஓவியத்தை அப்படியே ராஜாவிடம் சமர்ப்பித்துவிடு’ என்று சொல்லிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/257&oldid=1533349" இலிருந்து மீள்விக்கப்பட்டது