பக்கம்:பாற்கடல்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

லா. ச. ராமாமிருதம்


ராஜா ஓவியத்தைப் பாராட்டிக் கொண்டிருக்கையில் வர்ணச்சொட்டையும் அது விழுந்திருக்கும் இடத்தையும் கண்ணுற்றதும் திடுக்கிட்டான். ராணியின் தொடை மச்சம் சைத்ரீகனுக்கு எப்படித் தெரியவந்தது? அவள் மஹா பதிவிரதை ஆயிற்றே! யாரைச் சந்தேகிப்பது? மூன்று நாட்களுக்கு அவனுக்கு உணவே செல்லவில்லை. ராஜாங்கக் காரியங்களே ஓடவில்லை. காளிதாஸன் அப்போது அவனிடம் வந்து, 'ஹே ராஜன்! இதில் தெய்வச் செயலைக் காண்கிறோம். ஓவியன் தன் கலையைத் தவமாகப் பேணுபவன். ராணியோ பத்தினி. இந்த இடத்தில் சத்தியம் தானாகவே தோன்றி, தானே பேசி, ராணியின் மச்சத்தைத் தானே தீட்டி இருக்கிறது. ஆகையால் நீ யாரையும் சந்தேகப்பட வேண்டாம். தெய்வ ப்ரசன்னத்துக்குச் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் ! என்று விளக்கி, தேற்றி, சஞ்சலத்தைப் போக்கினான் - என்று கதை.

இந்தக் கதையில் ஓட்டை இருக்கிறது! ராணி உடுத்த படிதானே 'போஸ்' கொடுத்திருப்பாள் ? அப்போது மச்சம் வெளியில் தெரிய வாய்ப்பே இல்லையே! மச்சம் வெளியில் தெரியும் அளவுக்கு ராணியின் ஆடை ஸல்லாவா? அப்படி இருக்கலாமா? ஓவியத்தில், ராணி ஆடைமீது வர்ணம் சொட்டி இருந்தால் ஓவியத்தின் அழகு கெட்டுப்போகவில்லையா? இந்தக் கதையை நான் எழுதவில்லை. கேட்ட கதைதான். இதை ஒரு நீதிக்கதை என்று கொண்டு அந்த நீதியை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் போலும்!

எழுத்து, ஒவியம், இசை, சிற்பம், நடனம், ஆய கலைகள் அறுபத்து நான்கும் மடிப்பு விசிறிபோல், விரித்தால் தனித்தனியாக, பல ஜால மடிப்புகள். மடக்கி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/258&oldid=1533350" இலிருந்து மீள்விக்கப்பட்டது