பக்கம்:பாற்கடல்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

291


காலை வெயில் சூடு கண்ணில் பட்டு, எங்களை எழுப்பிற்று. அவசரமாகப் பல்லை விளக்கிவிட்டு, அம்மா வார்த்துக் கொடுத்திருந்த இட்டிலிப் பொட்டலத்தை அவிழ்த்தோம். எண்ணெயும், நெய்யும், மிளகாய்ப் பொடிக் கலவையில் அப்படியே இரண்டு பக்கங்களிலும் படும்படி தனித்தனியாக முக்கி எடுத்து, லேசாகத் தண்ணீர் தெளித்து ஊறிய இட்லியைத் தின்று பாருங்கள்.

ருசி முதற்கொண்டு சொல்லிக் கொடுக்கும் நாளாகி விட்டதே இந்தக் காலம்! ஊசிப்போன சட்டினிக்கு அவன் இன்னொரு பேர் வைத்துக் குட்டித் தட்டில் மேசைமேல் கொண்டுவந்து வைத்தால், தனியாகக் காசு கொடுத்துக் கண்டேன் கண்டேன் என்று விழுங்கு வீர்கள்! (இப்படி எழுத்தில் விழுந்துவிட்டதற்காக, உங்களுக்குக் கோபம் வராமல் இருப்பதற்காக, நான் துணைக்கு உங்களுடன் சேர்ந்து விழுங்குகிறேன்!)

அவர்கள் எங்களை அங்கு இருப்பதாக பாவித்துக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. இதுதான் எங்களைக் கவனித்துக் கொள்வதா? அண்ணா இவர்களிடம் ஏன் எங்களை ஒப்படைக்கணும்? எனக்குச் சாவகாசமாக அவர்கள் மேல் கோபம் வந்தது. கள்ளிக் கோட்டை (கோழிக்கோடு) போய்ச்சேர முற்பகல் பதினோரு மணி பிடிக்கும். அதுவரை என் செய்வது? புரியவில்லை. காபி இல்லாமல் பிரம்மஹத்தி பிடித்த மாதிரி ஆகிவிட்டது.

ரெயில், எட்டு மணிவாக்கில் ஒரு பெரிய ஸ்டேஷனில் வந்து நின்றது. அந்தக் குடும்பம் சுறுசுறுப்புக் காண ஆரம்பித்தது. மேல் ராக்கிலிருந்து (Rack) மாமா ஒரு 'டின்னை' இறக்கினார். ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/297&oldid=1534394" இலிருந்து மீள்விக்கப்பட்டது