பக்கம்:பாற்கடல்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

லா. ச. ராமாமிருதம்


பிள்ளைகள் இருவரும் யானை மண்டை போன்ற ஒரு பெரிய வெண்கலக் கூஜா சொம்பு, இரண்டு மூன்று பாட்டில்களுடன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினர். வண்டியின் 'டிகானா' இங்கே பெரிசாகத்தான் இருக்கும்போல இருக்கு. எஞ்சின் அவ்வளவு நீண்ட மூச்சு விட்டது. சற்று நேரம் கழித்து வண்டித் தொடரே ஆடிற்று. எஞ்சினை மாற்றுகிறார்கள் போல இருக்கு.

அந்த அம்மா, டின்னை நாலு காலில் கட்டி இருக்கும் கயிற்றை அவிழ்த்து டின்னின் மேல் மூடியைத் திறக்கும் காரியத்தில் முனைந்திருப்பதை நான் சுவாரஸ்யமாக கவனிக்கிறேன். இதில்தான் எனக்குச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே 'ஸர்விஸ்' ஆச்சே ! என்னென்னவோ பொட்டலங்கள், டப்பாக்கள்; எடுத்து வைக்கிறாள். எத்தனை நாழி பண்றாள்?

யானை அடி அகலத்துக்கு மும்மூன்று பூரி எடுத்து அதன்மேல் ஒரு டப்பாவிலிருந்து திரட்டுப்பால் போன்று கெட்டியான ஒரு பாகை ஏற்றி எங்களிடம் நீட்டுகிறாள். போணி எங்களுக்குத்தான். சட்டென்று ஊறிவிட்ட எச்சிலை (சனியனே) விழுங்கிக்கொண்டு, ”நாங்கள் உங்களுக்குக் கொடுக்கல்லியே! எப்படி வாங்கிக்கிறது? எங்கள் அப்பா கோவிச்சுப்பா !” என்று தலையை பலமாக ஆட்டினேன். (எப்படி என் பட்டிக்காட்டான் பட்டணப் பிரவேசம்!)

மாமி பெரிசா வாய்திறந்து - உள்ளே ஒரு குருவி போய் உட்கார்ந்து கொள்ளலாம் - சிரித்துவிட்டாள். ”பரவாயில்லை, நீ சொன்னதே கொடுத்தமாதிரிதான். எடுத்துக்கொள்.” - (தமிழ் கொச்சை) - என்று திணித்தாள். மாமா பற்களிடையே பைப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/298&oldid=1534396" இலிருந்து மீள்விக்கப்பட்டது