பக்கம்:பாற்கடல்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

லா. ச. ராமாமிருதம்


அம்மா சட்டென எழுந்து உட்காருகிறாள். 'இதோ மறுபடியும் அதுக்குமேல் பிரளயம் இப்போ வந்திருக்கு. நானும் என்னவோ எனக்கு மிஞ்சி யாருமில்லேன்னு வளைய வரேன். ஆனால் எனக்கு ஒரு சமயம் இல்லாட்டா ஒரு சமயம் பயமாயிருக்கே!'

மன்னி அம்மாவின் தலையைத் தன் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். ”அந்த அளவுக்குப் பெருந்திரு விட்டுடமாட்டாள். அம்மாப் பொண்ணே, நாங்களே உன் தைரியத்திலேதானே இருக்கோம்!”

அம்மாவின் மனம், நினைப்பதெல்லாம் ஒரு செறிந்து எங்கே நிற்கிறது என்று தெரிகிறது. அம்மாவின் எண்ணத்தில் நான் First இல்லை. ஆனால் ஏனோ எனக்குப் பொறாமையில்லை.

முதல் காதல், முதல் துயரம், முதல் முறிவு யாருக்கும் நேரும் கவிதை. முன்னாலேயே சொல்லியிருக்கிறேன். பின்னரெல்லாம் காயங்கள்; நேர்ந்து கொண்டு தானிருக்கின்றன. நேர்ந்துகொண்டுதான் இருக்கும். படத்தான் காயங்களே.

புலி, சிங்கம், சிறுத்தை, கரடி வனவிலங்குகள் வேட்டையாடுகையில் அவைகளையும்தான் பற்கள் கடிக்கின்றன. நகங்கள் கிழிக்கின்றன. கொம்புகள் குத்தி வாங்குகின்றன. அம்புகள் பாய்கின்றன. குண்டுகள் விலாவில் புதைகின்றன. முட்கள் தைக்கின்றன. ஒரொரு சமயமும் மிருக வைத்தியன். இதோ வந்தேன் ராசாவே! என்று கட்டியம் கூறிக்கொண்டு பாண்டேஜுடன் தோன்றுகிறானா? அல்லது Androcles ஆஜராகிறானா?

காயங்கள் பட்டுக்கொண்டுதான் இருக்கும். புதைந்த குண்டின் மேல் சதை மூடும்- அம்புப் புண் தீராத வினை கண்டிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/330&oldid=1534456" இலிருந்து மீள்விக்கப்பட்டது