பக்கம்:பாற்கடல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

53


டிருக்கின்றனர். நான் நடு முற்றத்தில் படுத்தவண்ணம் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். கவனம், படிப்படியாக படிந்த வாய்க்காலில், ரேடியோ சத்தங்கள் எழுந்து, உருத்தெளிந்து, நடைபெறுவது நாடகம் எனத் தெரிந்தது.

எனக்குச் சாதாரணமாக ரேடியோ நாடகம் எடுபடுவதில்லை. ஆனால் அன்று நாடக ஆசிரியர் கொண்டுபோயிருக்கும் பாணியில் (யாரோ வங்காள ஆசிரியரின் தமிழாக்கம். நாடக முடிவில் தெரிவிப்பார்களே!) ஒரு சக்தி விறுவிறுத்து, கவனத்தை வசம் கொண்டது.

காசிராஜன் தீர்ப்பளித்தாகிவிட்டது. சந்திரமதி திருடியெனத் தீர்மானிக்கப்பட்டு, அவள் தலையை இதோ அரிச்சந்திரன் சீவப்போகிறான்.

பூமியிலும் வானிலும் கூட்டம் நெரிகிறது. தேவர்கள் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர். "ஜே! ஜே! அதோ உருத்தெரியா ஜன இரைச்சலைத் தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறான். அதிலிருந்து கணிரென்று அரிச்சந்திரன் குரல் பிரிந்து வருகிறது. அவன் கைக் கத்தியின் தீட்டிய பளபளப்பை என்னால் பார்க்க முடிகிறது.

"சந்திரமதி ! உன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்!"

நினைத்துக்கொள்கிறாள். அவளுடைய இஷ்ட தெய்வம் யார்? (!)

விசுவாமித்ரர் ஓடி வருகிறார். கடைசி நிமிஷத்தில் அவனை, இத்தனை சோதனைகளிலிருந்து மீட்டுவிடும் ஒரு பொய்க்குக் கெஞ்சுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/59&oldid=1533290" இலிருந்து மீள்விக்கப்பட்டது