பக்கம்:பாற்கடல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

லா. ச. ராமாமிருதம்


தியானத்தின் மூலம் சமாதி நிலை சாத்தியமானால்,

எழுத்து மூலம் - சொல்ல அஞ்சுகிறது - அநாம தேயத்தின் ஸர்வாகாரம்.

Legend, fable, parable.

பதவி கிடைக்குமா? கிடைத்துவிட்டாலும் ஏதோ விபத்தில் அது நியாயமில்லை என்றுகூடத் தோன்றுகிறது. ஆனாலும் கிடைக்குமா?

எப்பவோ ஒரு நண்பர் சொன்னது:

குண்டலினி சக்தியின் விழிப்பு எல்லாருக்கும் உண்டு. யோகம் பயிலாவிடினும், நினைவு பூர்வமாக உணர்ந்தாலும் உணர முடியாவிட்டாலும், ஒருமுறை நிச்சயம் உண்டு. விழிப்பின் நேரமும், சமயமும் முன் அறியற்பாலதன்று. மெதுவாகச் சுருள் கழன்று, மூலாதாரத்தினின்று ஸர்ப்பம் முதுகின் நரம்புத்தண்டின் மேல் ஏறத் துவங்குகிறது. ஒரு தூரம் ஏறியபிறகு - எம்மட்டு என்று யாரே அறிவார் ? அல்லது ஏறுவதற்கு முன்னரேயோ. அதையும் யாரே அறிவார்? ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்க்குமாம். அந்த நோக்கமும் என்ன ? அதற்குத்தான் தெரியும். இந்த ஸர்ப்பமே உள்ளதா? அல்லது உருவகமா? இதுவே தனி ஆராய்ச்சி. இருள், உறை கழன்று உள் ஒளியின் புறப்பாடை இம்முறையில் ஏற்றுக் கொண்டோமானால் அது விழிப்பின் முதல் சுற்றுப். பார்வையின் விளைவாகத் தான். மனிதன் தன் பிறவியின் அவதார நேர்த்தியை (genius) அடையாளம். கண்டுகொள்கிறான். இதன் நேர்பலன், அந்தந்த மனப்பான்மைக்கேற்ப ஓவியமோ, காவியமோ, ஸங்கீதமோ, சிந்தனையோ இத்யாதி கலை ஈடுபாடு உண்டாகிறதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/90&oldid=1533363" இலிருந்து மீள்விக்கப்பட்டது