பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275

பிரதாப முதலியார் சரித்திரம்

சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டு ““என்னுடைய அத்தான் நெருப்பைச் சுடு மென்பார், தண்ணீர் குளிர்ந்திருக்கு மென்பார். ஈ பறக்கு மென்பார். காகங் கறுப்பாகவும், கொக்கு வெண்மை யாகவும் இருக்கு மென்பார். ஆகையால் அத்தானைப் போற் சமர்த்தர்கள் யார்?”” என்னும் கருத்தை அடக்கி ஒரு வெண்பாப் பாடினாள். அஃது:—

தீயே சுடுமென்பர் தெண்ணீர் குளிருமென்பர்
ஈயே பறக்குமென்ப ரின்னமுந்தான்—பாய்காகஞ்
சுத்தக் கறுப்பென்பர் சூழ்கொக்கு வெண்மையென்பர்
அத்தானைப் போல்சமர்த்தர் யார்?

நான் அத்தா னென்கிற முறைமை பற்றி, ஞானாம்பாள் பரிகாச மாகப் பாடின படியால், ஒருவரும் விகற்பமாக எண்ணார்க ளென்று நம்புகிறேன்.

ஞானாம்பாள் என்னைப் பார்த்து “நீங்கள் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குச் சாதகமாயிருக்குமென்று நினைத்தே நான் இந்த ராஜ்யபாரத்தை அங்கீகரணஞ் செய்தேன்? இப்போது என்னுடைய மனோரதம் நிறைவேறி உங்களைக் காணும்படியான பெரும்பேறு கிடைத்துவிட்டதால் இனி நமக்கு இந்த ராஜ்யபாரம் வேண்டுவதில்லை. எனக்கு நீங்களே எஜமான் நான் உங்களுக்கு ஊழியக்காரி. நான் உங்களுடைய ஊழியத்தை விட்டு விட்டு ராஜாங்கத்தை வகிப்பது முறையல்ல. அன்றியும் அரசாட்சி செய்யத் தகுந்த யோக்கியதையும் என்னிடத்தில் இல்லை. ஆகையால் ஒருவருக்குந் தெரியாமல் நாம் இந்த ஊரைவிட்டுப் போய்விடுவதே சர்வோத்தமம் என்றாள்”. நான் அவளைப் பார்த்து “இந்த ஊர் சில காலமாக அரசனில்லாமல் அராஜகமாக இருப்பதால் துஷ்டர்கள் அதிகரித்து சாதுக்கள் எல்லோரும் ஆலையில் அகப்பட்ட கரும்பு போலத் துன்பப் படுகிறார்கள். இதை நாம் ஸ்வாநு-