பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

புதியதோர் உலகு செய்வோம்

போன்ற கலைத்திறமை, மக்கள் மனங்களை இறையுணர்வுடன் இணைக்கும் ஊடகமாயிற்று. அந்நாட்களில் கல்லூரியில் அடி வைத்த பெண், நகைகளில்லாமல், வெள்ளையோ, வேறு பளப்பளப்பில்லாத எளிய நூல் சேலையோ அணிவதை நாகரிகமாக்கினாள்.அந்நாட்களில் சேவைப்பணிகளில் இருந்த மருத்துவர்கள், செவிலியர், உதவியாளர், வெறும் வெள்ளைச் சேலையணிவது வழக்கமாக இருந்தது. சேலை ஓரத்துக் கரைகள், சிறுபூக்கள் அச்சிட்ட தலைப்புகள் மட்டுமே வேறுபட்டன. திருமணங்கள் ஓசைப்படாமல் மனம் ஒத்த இணைதலுடன் சான்றோரின் ஆசிகளுடன் நடந்தேறின.

ஆனால் இந்தக் குறுகிய கால விரதங்கள், சுதந்தரம் வந்தவுடன் பெரும்பாலும் அரசியல்வாதிகளாலேயே உடைக்கப்பட்டன. தொழில்மய, முதலாளித்துவ கலாசாரங்களில் பெண் மீண்டும் ‘துரெளபதை’யாக்கப்பட்டாள். சீதைகளாக அக்கினிப் பிரவேசக் கற்பியலில் நெறிக்கப்படுகின்றனர். வழக்கொழிந்து விடுமோ என்ற அச்சத்துடன் வெள்ளைச் சீலை வைதவ்யமாகிய கைம்மையையும் மீண்டும் மீண்டும் காட்சி ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. இவற்றை எதிர்த்துச் சமாளிக்கக்கூடிய கல்வி, பெண்களுக்குக் கிடைக்கவில்லை.

காலையில் இரண்டு மூன்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு, மாலையில் அவர்களைப் பார்க்க வரும் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர்கள் கண்களைப் பறிக்கும் பட்டுடைகள், நகைகள், அடுக்கு மல்லிகைச் சரங்கள், கனத்த உதட்டுச் சாயம் என்று விளங்குவதை பார்த்துத் திகைக்கிறேன்.

‘நான் வெறும் உடலல்ல - அனைத்து மனித அறிவாற்றல்களுக்கும் உரிமைகளுக்கும் சொந்தக்காரி’