பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 / புத்தரின் வரலாறு

பெற்றோருடைய அனுமதி கிடைக்காத சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்கக்கூடாது என்று கூறி சட்டம் செய்தார்.

அடுத்த நாள், சுத்தோதன அரசருக்கும் கௌதமி தேவிக்கும் பிறந்த நந்த குமாரனுக்கு இளவரசுப் பட்டமும் திருமணமும் நடக்க ஏற்பாடாகியிருந்தது. பகவன் புத்தர், நந்த குமாரனுடைய மாளிகைக்குச் சென்று, உணவு அருந்தி பிக்ஷாபாத்திரத்தை நந்தகுமாரன் கையில் கொடுத்து முன்னே நடத்தார். நந்தகுமாரன் அவரைப் பின்தொடர்ந்து சென்றான். அப்போது, மணப்பெண்ணாகிய ஜனபத கல்யாணி என்பவள், நந்தகுமரனைக் கண்ணால் பார்த்து, "ஓ, கணவரே! உடனே விரைவாகத் திரும்பிவாருங்கள்" என்று கூறுவதுபோல நோக்கினாள். குமாரனும் அதனை அறிந்து, "பாத்திரத்தை எப்போது வாங்கிக்கொள்வார்" என்று நினைத்த வண்ணம் பின்தொடர்ந்தான்.

பகவர் விகாரைக்குச் சென்றார். குமரனும் மரியாதையோடு பின் தொடர்ந்தான். அப்போது பகவர் நந்தனைப்பார்த்து, "தந்தா! நீ சந்நியாசம் பெறுவதற்கு விரும்புகிறாயா?" என்று கேட்டார். அவனும் "ஆம்" என்று விடைகொடுத்தான். பகவன் புத்தர் நந்தகுமாரனுக்குச் சந்நியாசம் கொடுத்தார்.

அரச குடும்பத்திலே பிறந்த அநேக அரசகுமாரர்கள் பகவன் புத்தரிடம் வந்து தர்மங்கேட்டுத் துறவு பூண்டனர். பிறகு, பத்தியர், அநுருத்தர், ஆனந்தர், பகு, கிம்பிலர், தேவதத்தர் என்னும் ஆறு குமாரர்களும் ஒருவாரம் வரையில் தேவர்கள்போல அரசபோகத்தை அனுபவித்துப் பிறகு, எட்டாம்நாள் உபாலி என்னும் அம்பட்டனை அழைத்துக்கொண்டு மள்ள நாட்டில் அநுபியவனம் என்னும் தோட்டத்தில் தங்கியிருந்த பகவன் புத்தரிடம் சென்றார்கள். சென்று துறவு கொள்வதற்குத் தங்களுடைய ஆடை அணிகளையெல்லாம் களைந்து உபாலியிடம் கொடுத்தார்கள். உபாலி முதலில் அவைகளை ஏற்றுக்கொண்டான். பிறகு யோசித்துத் தானும் துறவு கொள்வதாகக் கூறினான். பகவன் புத்தரிடம் வந்தவுடன் அவர்கள் வணங்கித் தங்களுக்குத் துறவு கொடுக்கும்படி கேட்டார்கள். அன்றியும் முதலில் உபாலிக்குத் துறவு கொடுக்கும்படிச் சொன்னார்கள். அவ்வாறே இவர்கள் எல்லோருக்கும் சந்நியாசம் அளிக்கப்பட்டது.

ஜேதவன தானம்

பகவன் புத்தர் இராசகிருகம் அடைந்து தேவகனம் என்னும் இடத்தில் தங்கியிருந்தபோது, சிராவத்தி நகரத்தில் இருந்து வந்திருந்த