பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 105

சுதத்தன் என்னும் செல்வப்பிரபு, இராசகிருகத்திற்கு வந்திருந்தான். இவனுக்கு அனாத பிண்டிகன் என்னும் பெயரும் உண்டு. இப்பிரபு உலகத்திலே புத்தர் தோன்றியுள்ளார் என்பதைக் கேள்விப்பட்டு, அடுத்த நாள் சீதவனத்துக்குவந்து பகவரைக்கண்டு வணங்கி உபதேசம் கேட்டான். அடுத்த நாள் புத்த சங்கத்தாருக்குப் புத்தர் தலைமையில் பெருஞ் செல்வத்தைத் தானம் செய்தான். பிறகு, சிராவஸ்தி நகரத்திற்கு எழுந்தருள வேண்டுமென்று பகவரை வணங்கிக் கேட்டுக் கொண்டான்.

புத்தரை வரவேற்பதற்காக அனாத பிண்டிகன் முன்னதாக சிராவத்தி நகரம் சென்றான். சென்று, ஜேதன் என்னும் அரசனுக்கு உரியதான ஜேதவனம் என்னும் தோட்டத்தைப் பதினெட்டு கோடி பொன் விலை கொடுத்து வாங்கி, அதில் விகாரையையும், அதன் நடுவில் பகவர் தங்குவதற்காக கந்தகுடியையும் தேரர்கள் தங்குவதற்குரிய இடங்களையும் அமைத்தான். பகவன் புத்தர் அங்கு எழுந்தருளியபோது அவரைச் சிறப்பாக வரவேற்று அவருக்கு ஜேதவனத்தையும் விகாரையையும் அவருக்கு நீர் பெய்து தாரைவார்த்துக் கொடுத்தான். பகவன் புத்தர் அவைகளைப் பிக்கு சங்கத்தின் சார்பாக ஏற்றுக்கொண்டார். பகவன் புத்தர், அங்கு மக்களுக்கு அற நெறிகளைப் போதித்துக்கொண்டிருந்தார்.

ஜீவகன்

அக்காலத்தில் ஜீவகள் என்னும் பெயருள்ள கை தேர்ந்த வைத்தியன் இருந்தான். இவன் உச்சைனிநாட்டின் அரசன் பிரத்யோதன் என்பவனுக்கும், மகத நாட்டு அரசன் விம்பசாரனுக்கும் வைத்தியனாக இருந்தான். பகவன் புத்தருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது இந்த ஜீவகன் மருந்து கொடுத்து நோயைப் போக்கினான். அன்றியும், பிரத்யோத அரசன் தனக்கு வெகுமதியாகக் கொடுத்த விலைஉயர்ந்த ஆடைகளைப் பகவன்புத்தருக்கு அன்புடன் வழங்கினான்

கொள்ளை நோய்

வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, வைசாலி நகரத்தார் அனுப்பிய தூதுவர்கள் வந்து, அந்த நகரத்தில் உள்ள கொள்ளை நோய்ப்பீடையை ஒழிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆறுவகையான சமயத்துத் தலைவர்கள் வந்து அந்நோயைப் போக்க முயன்றனர். ஆனால், அந்நோய் நீங்கவில்லை. அவர்கள்