பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 113

பகவர் ஆலவனத்திலே தங்கியிருந்தபோது ஒருநாள், அவருடைய மாமனாராகிய சுப்ரபுத்தர், ததாகதரை இழிவாகப் பேசி அவமானப்படுத்தினார். சுப்ரபுத்தர், தன்மகளாகிய யசோதரையாரை விட்டுப்போய் துறவுபூண்ட தகாகதரிடம் சினமும் பகையும் கொண்டிருந்தார். ஆகவே அவர் ஆலவனத்தில் ததாகதர் தங்கியிருந்தபோது, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்னும் கருத்தோடு குடித்து வெறிகொண்டு ததாகதரிடம் சென்றார். அப்போது ததாகதர் பிக்ஷைக்காக நகரத்தின் தெருவிலே நடந்து கொண்டிருந்தார். சுப்ரபுத்தர், ததாகதரை மறித்து தடுத்து பலவகையாக ஏசி இகழ்ந்து பேசினார். அவருடைய நிந்தனைகள் கட்டுக்கடங்காமல் அளவுக்கு மீறிச்சென்றன. அப்போது ததாகதர் அமைதியாகப் பக்கத்திலிருந்த ஆனந்ததேரைப் பார்த்து, "சுப்ரபுத்தரை ஒரு வாரத்திற்குள் பூமி விழுங்கிவிடும்" என்று தீர்க்கதரிசனம் கூறினார். அதைக்கேட்ட சுப்ரதத்தர் எள்ளிநகைத்து மேன்மேலும் தூற்றினார். பிறகு, ததாகதரின் தீர்க்க தரிசனத்தை நினைத்து ஒரு வாரம் வரையில் பூமியில் இல்லாமல் உயரமான மாளிகையிலே தங்கியிருந்தார். ஆனால் ஏழாம் நாள் பூமிவெடித்து அவரை விழுங்கிவிட்டது. அவர், அவீசி என்னும் நரகத்தை அடைந்தார்.

அணுக்கத் தொண்டர்

பகவன் புத்தர் போதிஞானம் அடைந்த இருபதாவது ஆண்டிலே அதாவது தமது ஐம்பத்தைந்தாவது வயதில், தமக்கு ஒரு அணுக்கத் தொண்டரை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அதனால் வெளுவனத்திலே கந்த குடியிலே இருந்தபோது சீடர்களையெல்லாம் அழைத்து, "பிக்குகளே! ததாகதருக்கு வயது ஆயிற்று. அவருக்கு ஒரு அணுக்கத்தொண்டர் தேவை. உங்களில் யாருக்கு விருப்பமோ அவர் எழுந்து நின்று சம்மதத்தைத் தெரியப்படுத்தலாம்" என்று அருளிச் செய்தார்.

அப்போது பிக்குகள் எல்லோரும் நான், நாள் என்று கூறித் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் பகவன் புத்தர் அவர்களையெல்லாம் வேண்டாம் என்று கூறிமறுத்துவிட்டார். ஆனத்த மகாதேரர் மட்டும் வாளா இருந்தார். அப்போது பிக்குகள் எல்லோரும் ஆனந்தரைப் பார்த்து, "ஆனந்தரே! தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள். பகவர் தங்களை ஏற்றுக்கொள்வார்" என்று கூறினார்கள்.