பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 / புத்தரின் வரலாறு

பகவன்புத்தர், "பிக்குகளே! ஆனந்தருக்கு விருப்பம்இருந்தால், அவரே தமது விருப்பத்தைக் கூறுவார். நீங்கள் அவரைக் கட்டாயப்படுத்தாதீர்கள்" என்றார். ஆனந்த தேரர் எழுந்து நின்று, "பகவன் நான்கு பொருள்களை எனக்கு மறுக்கவும் நான்கு பொருள்களை அளிக்கவும் அருள் புரிந்தால், அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க இசைகிறேன். எனக்கு மறுக்கவேண்டிய நான்கு பொருள் என்னவென்றால் 1. பகவருக்கு நல்ல உணவு கிடைக்குமானால், அதனை அடியேனுக்குக் கொடுக்கக்கூடாது. 2. நல்ல ஆடை கிடைத்தால் அதையும் எனக்குக் கொடுக்கக்கூடாது. 3. பகவருக்கு அளிக்கப்படுகின்ற ஆசனங்கள் எனக்குக் கொடுக்கக்கூடாது. 4. பகவரை வணங்கிப் பூசிக்க யாரேனும் அழைத்தால் அந்த இடங்களுக்கு அடியேனை அழைக்கக் கூடாது.

"பகவர் அடியேனுக்கு அளிக்க வேண்டிய நான்கு பொருள்கள் எவை என்றால், 1. அடியேனைப் பூசிக்க யாரேனும் அழைத்தால் அந்தப் பூசையைப் பகவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். 2. அடியேன் அழைத்து வருகிறவர்களுக்குப் பகவர் தரிசனம் தரவேண்டும். 3. அடியேன் மனம் தடுமாறி திகைக்கும்போது பகவர் என்னைத் தேற்றி நல்வழிப்படுத்த வேண்டும். 4. அடியேன் இல்லாத காலத்தில் மற்றவருக்குச் செய்த உபதேசங்களை அடியேனுக்கும் உபதேசிக்க வேண்டும். இந்த எட்டு வரங்களையும் பகவன் புத்தர் அருளினால், அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க இசைகிறேன்" என்று கூறினார்.

பகவன் புத்தர் இந்த வரங்களை அளித்து அனந்த தேரரைத் தமக்கு அணுக்கத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். பகவன் புத்தர், பரிநிர்வாணம் அடைகிற வரையில் ஆனந்த மகாதேரர் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்தார்.

அங்குலி மாலன்

அக்காலத்திலே கோசல நாட்டிலே அங்குலி மாலன் என்னும் ஒரு கொடியவன் இருந்தான். அவன் வழிப்போக்கரைக் கொன்று அவர்களின் கை விரல்களில் ஒன்றை எடுத்து மாலையாகக் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு அங்குலி மாலன் என்னும் பெயர் உண்டாயிற்று. அவன் அணிந்திருந்த அங்குவி மாலையில் 998 விரல்கள் இருந்தனவாம். இந்தக் கொடிய கொலைகாரனை நல்வழிப்படுத்தப் பகவன்புத்தர் கருதினார். அவனிடம் போகக்கூடாதென்று பலர் பகவன் புத்தரைத்