பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 115

தடுத்தார்கள். ஆயினும் பகவர் அவனிருக்கும் காட்டில் சென்று அவனுடன் உரையாடி அவனை நல்வழிப்படுத்தினார். அவன் நல்லறிவு பெற்றுத் திரிசரணம் அடைந்து புத்த சங்கத்தில் சேர்ந்து துறவியானான். அன்றியும், சிறிது காலத்திற்குள் அர்ஹந்த நிலையையும் அடைந்தான்.

கொலைக்குற்றம்

புத்தரின் பௌத்த மதம் நாளுக்கு நாள் வளர்ந்து நாட்டில் செல்வாக்குப் பெறுவதைக் கண்ட எதிர்சமயத்துத் தலைவர்கள் மிகவும் பொறாமை கொண்டார்கள். பகவன்புத்தர் மீது பழிசுமத்தி அவருக்குச் செல்வாக்கு இல்லாமல் செய்ய எண்ணினார்கள். அவர்கள் அதற்காகச் சுந்தரி என்னும் பெயருள்ள ஒருத்தியை நியமித்தார்கள். சுந்தரி, பகவன் புத்தர் தங்கியிருந்த தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வந்தாள். யாரேனும் அவளைக் கண்டு எங்குபோய் வருகிறாய் என்று கேட்டால், புத்தரிடம் சென்று வருவதாகவும் அவருக்கும் தனக்கும் கூடாவொழுக்கம் உண்டென்றும்கூறுவாள். இவ்வாறு சில காலஞ்சென்றது. பிறகு, அந்தச் சமயத் தலைவர்கள், சில கொடியவர்களுக்குக் கை நிறைய காசு கொடுத்துச் சுந்தரியைக் கொன்று பகவன் புத்தர் தங்கியிருக்கும் ஜேதவன ஆராமத்தில் போட்டுவிடும்படி ஏவினார்கள். அக்கொடியவர்களும் அவ்வாறே சுந்தரியைக் கொன்று ஆராமத் தோட்டத்தில் போட்டுவிட்டார்கள்.

பொழுது விடிந்ததும், சுந்தரியைப் பௌத்தர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று அரசரிடம் கூறினார்கள். இதனால், பகவன் புத்தருக்கும் பௌத்த சங்கத்துக்கும் பெரும் அபவாதம் ஏற்பட்டது. ஆனால், சில காலத்திற்குள் குற்றவாளிகள் அகப்பட்டுக் கொண்டார்கள். கொலை செய்த கொடியவர்கள் குடித்து வெறித்துத் தமக்குள் சச்சரவு செய்து கொண்டபோது, அவர்கள் சுந்தரியைக் கொலை செய்த செய்தி வெளிப்பட்டது. அரசன் அவர்களை அழைத்து விசாரித்தபோது, சுந்தரியைக் கொன்றவர்கள் தாங்களே என்றும், பௌத்த விரோதிகளான சமயத் தலைவர்கள் தங்களுக்குக் காசு கொடுத்துக் கொலை செய்து புத்தர் ஆராமத்தில் போட்டுவரும்படிக் கூறினார்கள் என்றும் தாங்கள் அவ்வாறே செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்கள். அரசன் குற்றவாளிகளைத் தண்டித்தார். புத்தர் மேல் சுமத்தப்பட்ட அபவாதம் நீக்கப்பட்டது.