பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 / புத்தரின் வரலாறு

என்று கூறி விம்பசார அரசனைக் கொன்றுவிடும்படித் தூண்டினான். அதனைக் கேட்ட அஜாத சத்துரு, அரசனைச் சிறையில் அடைத்து உணவு கொடுக்காமல் கொடுமை செய்தான். அரசன் சிறைச்சாலையில் வருத்தம் உற்றுச் சில நாட்களுக்குப் பிறகு இறந்துபோனான்.

வில்வீரர்

தேவதத்தன், அஜாதசத்துருவின் உதவிபெற்று பகவன் புத்தரை அழிக்கத் தொடங்கினான். வில்வீரர் பதினாறு பேரை ஏற்படுத்திப் பகவன் புத்தர் போகும்போது அம்பு எய்து அவரைக் கொல்லும்படி ஏவினான். வீரர்கள் வில் அம்புடன் சென்று காத்திருந்தார்கள். பகவன் புத்தர் வந்த போது அவரைக் கண்ட வீரர்களுக்குப் பகவனின் தெய்விகத் தன்மை அவர்களின் மனத்தை மாற்றிவிட்டது. அவர்கள் ஓடிச்சென்று பகவன் பாதங்களில் விழுந்து வணங்கிச் சென்றார்கள். அவர்களில் ஒருவன், தேவதத்தனிடம் சென்று, பகவன் புத்தரிடம் உயிரைப் போக்குவது முடியாது என்று கூறினான்.

பாறையை உருட்டியது

பிறகு தேவதத்தன் வேறு முறையை கையாண்டான். பகவன் புத்தர் கிருத்திரகூடமலையின் (கழுகுமலையின்) அடிவாரத்தில் உலாவுகிற வழக்கப்படி, ஒருநாள் மாலையில் உலாவும்போது, தேவதத்தன் மலையுச்சியிலிருந்துபெரிய பாறை கல்லை உருட்டிப் பகவன் புத்தர்மேல் தள்ளினான். மலையுச்சியிலிருந்து வேகமாக உருண்டு வந்த அந்தப் பாறைக்கல், நல்லவேளையாக இரண்டு பாறைகளுக்கு இடையில் அகப்பட்டு நின்றுவிட்டது. அதிலிருந்து சிதறி வந்த சிறுதுண்டு பட்டு பகவரின் காலில் காயம் ஏற்பட்டது. பிக்குகள், ஜீவகன் என்னும் மருத்துவனைக்கொண்டு காயத்திற்கு மருந்து இட்டு ஆற்றினார்கள். அன்றியும், இனி மலையடிவாரத்திற்கு உலாவப் போகக்கூடாது என்றும்பகவரிடம் கூறினார்கள். அதற்குப் பகவன் புத்தர், "ததாகதரின் உயிரைப் போக்க ஒருவரர்லும் இயலாது. ததாகதருக்குக் காலம் வரும்போதுதான் அவர் உயிர் பிரியும்" என்று கூறி அவர்களின் அச்சத்தை நீக்கினார்.

யானையை ஏவியது

தேவதத்தன் அதனோடு நின்றுவிடவில்லை. நாளாகிரி என்னும் பெயரையுடைய யானைக்கு மதமூட்டிக் கோபங் கொள்ளச் செய்து