பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 117

நாளுக்கு நாள் இந்த ஆசை அவன் உள்ளத்தில் பெருகி வளர்ந்தது. அது மட்டுமன்று. பகவன் புத்தர் நாட்டில் அடைந்த சிறப்பைக் கண்டு அவனுக்குப் பொறாமையும் உண்டாயிற்று.

தேவதத்தன், விம்பசார அரசன் மகனும் இளவரசனுமான அஜாத சத்துருவிடம் சென்று, தான் அடைந்துள்ள இருத்திகளின் உதவியினாலே சில அற்புதங்களைச் செய்து காட்டி அரசகுமாரனைத் தன்வயப்படுத்தினான்.

வெளுவன

தேவதத்தன் என்றைக்காவது ஒருநாள் பௌத்த சங்கத்தின் தலைமைப்பதவியைப் பெற வேண்டும் என்று எண்ணினான். ஆராமத்தில் பகவன் புத்தர் உபதேசம் செய்துகொண்டிருந்தபோது, ஒருநாள் தேவதத்தன் எழுந்து நின்று வணங்கி, பகவன் புத்தருக்கு அதிக வயதாய் விட்டபடியால், சங்கத்தின் தலைமைப் பதவியைத் தனக்குக் கொடுக்கும்படி கேட்டான். “புத்த பதவி ஒருவர் கொடுக்க ஒருவர் பெறுவதன்று. பல பிறவிகளில் முயன்று பெறப்படுவது புத்த பதவி" என்று கூறி பகவன் புத்தர் மறுத்துவிட்டார். அதுமுதல் தேவதத்தனுக்குப் பகைமை உணர்ச்சி ஏற்பட்டுப் பகவன் புத்தரை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்னும் தீய எண்ணம் வளர்ந்தது.

அஜாத சத்துரு

பகவன் புத்தரை உயிர்போல் கருதியிருக்கும் விம்பசார அரசன் இருக்கிறவரையில்புத்தருக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது என்று அறிந்த தேவதத்தன், இளவரசனான அஜாத சத்துருவிடம் சென்று நல்லது சொல்வதுபோல் சில வார்த்தைகள் கூறினான். தந்தையாகிய விம்பசார அரசனைக் கொன்று மகதநாட்டின் அரசனாகும்படி தேவதத்தன் அஜாத சத்துருவுக்குக் கூறினான். அரசகுமாரனும் அரச பதவிக்கு ஆசைப்பட்டுத் தன் தந்தையைக் கொல்ல உடன்பட்டான். குற்றுடைவாளைக் கையில் ஏந்திக்கொண்டு அரசகுமாரன் இரவும் பகலும் அரண்மனையில் நடமாடுவதைக் கண்டு ஐயமுற்ற அரச வூழியர், விம்பசார அரசரிடம் அச்செய்தியைக் கூறினார்கள். விம்பசார அரசன் மகனை அழைத்துப் புத்திமதி கூறி, தான் அரசாட்சியைவிட்டு நீங்கி, மகனுக்கு அரச பட்டம் கட்டினான்.

தனது எண்ணம் நிறைவேறாமற்போனதைக் கண்ட தேவதத்தன், மீண்டும் அஜாத சத்துருவினிடம் சென்று, “உனது தந்தை உயிருடன் இருக்கும் வரையில் உனக்கு உண்மையான அரச அதிகாரம் இல்லை"