பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 / புத்தரின் வரலாறு

வந்து பரிநிர்வாணம் அடைந்தபோது நாம் அவ்விடம் இல்லாமற் போனோமே என்று பிறகு நீங்கள் வருந்த வேண்டாம். இச்செய்தியையறியுங்கள்" என்று சொல்லிவிட்டு வரும்படி அனுப்பினார்.

ஆனந்த தேரரும் இன்னொரு தேரரும் புறப்பட்டுக் குசி நகரம் சென்றார்கள். அப்போது நகர மண்டபத்திலே மள்ளர்கள் ஏதோ காரணமாகக் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களிடம் சென்று பகவன் கூறிய செய்தியை ஆனந்ததேரர் கூறினார். இதைக்கேட்ட மள்ளர்கள் வருத்தம் அடைந்தனர். இச்செய்தி உடனே நகரமெங்கும் பரவியது. முதியவரும் இளையவரும் பெண்களும் குழந்தைகளும் அழுது புலம்பினார்கள். "பகவன் புத்தர் இவ்வளவு சீக்கிரத்தில் பரிநிர்வாணம் அடையப் போகிறார். இவ்வளவு சீக்கிரத்தில் பரிநிர்வாணம் அடையப் போகிறார்" என்று கூறித் துன்பம் அடைந்தார்கள். பிறகு மள்ளர்களுள் ஆண்களும் பெண்களும் முதியவரும் குழந்தைகளும் எல்லோரும் உபவர்த்தன வனத்திற்கு வந்தார்கள்.

அப்போது ஆனந்தமகாதேரர் தமக்குள் இவ்வாறு கருதினார். "மள்ளர்களை ஒவ்வொருவராகப் பகவரிடம் அனுப்பினால் பொழுதுவிடிந்துவிடும். ஆகையால் குடும்பம் குடும்பமாக பகவரிடம் அனுப்புவது நல்லது" என்று எண்ணி, ஒவ்வொரு குடும்பமாக உள்ளே வரச்சொல்லி பகவன் புத்தரிடம், "இன்ன பெயருள்ள மள்ளர் தமது குடும்பத்துடன் வந்திருக்கிறார்" என்று எல்லாக் குடும்பத்தாரின் பெயரையும் கூறினார். அந்தக் குடும்பத்தார் பகவன் புத்தருக்கு வணக்கம் செய்து சென்றார்கள். இவ்வாறு அவ்விரவு முதல் யாமத்திற்குள் எல்லா மள்ளர் குடும்பத்தாரும் வந்து பகவன் புத்தரை வணங்கித் தங்கள் இல்லம் சென்றார்கள்.

கடைசி தர்மோபதேசம்

அந்தச் சமயத்தில் குசிநகரத்தில் சுபத்தர் என்னும் பெயருள்ள ஒரு துறவி இருந்தார். இவர் பௌத்தரல்லர். வேறு மதத்தைச் சேர்ந்தவர். அவ்விரவில் கௌதம புத்தர் நிர்வாணமோக்ஷம் அடையப்போகிறார் என்பதையறிந்த இந்தத் துறலி, பகவன் புத்தரைக் காணவேண்டும். என்று விரும்பினார். அவர் உபவர்த்தன வனத்திற்கு வந்து, புத்தரைப் பார்க்க விடும்படி ஆனந்ததேரரைக் கேட்டார். இவர் பகவரிடம் சமயவாதம் செய்து அவருக்கு ஆயாசத்தை உண்டாக்குவார் என்று கருதி, அனந்தர் அவரை உள்ளே அனுப்ப மறுத்தார். சுபத்தர் பகவரை