பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 / புத்தரின் வரலாறு

நன்கு கற்பித்தார். இவ்வித்தைகளில் எல்லோரும் தேர்ச்சியடைந்து சிறந்து விளங்கினார்கள். சித்தார்த்த குமாரனும் இவ்வித்தைகள் எல்லாவற்றிலும் தமக்குத் தாமே கற்றுத் தேர்ந்தார்.

சித்தார்த்த குமாரனுடைய திறமையையும் நுட்ப அறிவையும் கண்ட சாந்திதேவர் அவரைப் புகழ்ந்து வியந்தார். "இளைஞராகிய இவர் தமக்குத் தாமே இவ்வித்தைகளையெல்லாம் கற்றுத் தேர்ந்தது வியப்பானது, கற்றது மட்டும் அல்லாமல் மற்றவர்களைவிட திறமைசாலியாக இருப்பது அதனினும் வியப்பானது" என்று கூறி மகிழ்ந்தார்.

சித்தார்த்தரின் அருள் உள்ளம்

சித்தார்த்த குமாரனுடைய சாத்திரக் கல்லியும் படைக்கலக் கல்வியும் பன்னிரண்டு வயதில் முற்றுப்பெற்றன. பிறகு,குமாரன் மற்ற இளைஞடன் சேர்ந்து சவாரி செய்தல் வேட்டையாடல் முதலிய விளையாட்டுகளில் காலங்கழித்தார்.

ஒருநாள் இவர்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆகாயத்தில் அன்னப்பறவைகள் வேகமாகப் பறந்து போவதைக் கண்டார்கள். அப்போது தேவதத்தன் என்னும் சிறுவன், தமது வில்வித்தையின் நுட்பத்தைக் காட்ட விரும்பி, வில்லில் அம்பை வைத்துக் குறி பார்த்து, ஒரு பறவையை எய்தான். பறவையின் இறக்கையில் பட்ட அம்பு ஊடுருவிப் போகாமல் சிறகிலேயே தைத்துக் கொண்டது. உடனே பறவை கீழே தூரத்திற்கப்பால் தோட்டத்தில் விழுந்தது. பறவை கீழே விழுந்ததைக் கண்ட சித்தார்த்த குமாரன் ஓடிச்சென்று பறவையைத் தமது இரண்டு கைகளினாலும் அன்புடன் எடுத்து அப்பறவை படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தினார். பிறகு தரையில் உட்கார்ந்து அதை மெல்ல மடியின்மேல் வைத்துக்கொண்டு சிறகில் பொத்திக் கொண்டிருந்த அம்பைப் பைய வெளியே எடுத்தார். பிறகு புண்ணில் தயிலம் தடவி அதற்குத் தீனி கொடுத்துக் காப்பாற்றினார். சில நாட்களில் பறவையின் புண் ஆறி நலம் அடைந்ததது.

தேவதத்தன், சித்தார்த்த குமாரனிடம் சிலரை அனுப்பி அன்னப் பறவையைத் தன்னிடம் சேர்க்கும்படி கேட்டாள். அவர்கள் வத்து, "தேவதத்தன் அம்பு எய்து அன்னப் பறவையை வீழ்த்தினார். அப்பறவை உமது தோட்டத்தில் விழுந்தது. அதைத் திரும்பி கேட்கிறார்" என்று கூறினார்கள்.