பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 33

எல்லோரும் கண்ணுறங்கும் நள்ளிரவிலே சித்தார்த்த குமாரன் விழித்தெழுந்தார். மகளிர் கண்ணுறங்குவதைக் கண்டார். அந்தக் காட்சி அவருக்கு வெறுப்பை உண்டாக்கிற்று. சிலமகளிர் வாயைத் திறந்துகொண்டு உறங்கினர். சிலர் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. சிலமகளிர் வாய் பிதற்றினர். அவர்களின் கூந்தல் அலிழ்ந்தும் ஆடைகள் விலகியும் கிடந்தன. இந்த விகாரக் காட்சிகளைக் கண்ட சித்தார்த்த குமாரன் மனவெறுப்புடன் தனக்குள் இவ்வாறு எண்ணினார்: சற்று முன்பு இவர்கள் தேவலோகப் பெண்களைப்போன்று காணப்பட்டனர். இப்போது வெறுக்கத்தக்க காட்சியளிக்கின்றனர். சற்று முன்பு இந்த இடம் தெய்வலோகம் போன்று இருந்தது. இப்போது இடுகாடு போலக் காணப்படுகிறது. உலகம் தீப்பிடித்தெரியும் வீடு போன்று காணப்படுகிறது. இவ்வாறு அவர் தமக்குள் எண்ணிக்கொண்டபோது இப்பொழுதே இல்லற வாழ்க்கையைவிட்டு விலகிப்போக வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

உடனே சித்தார்த்த குமாரன் கட்டிலை விட்டெழுந்து மண்டபத்தைக் கடந்து வாயில் அருகிலே வந்து, "யார் அங்கே" என்று பணியாளர்களை விளித்தார். "அரசே, அடியேன் சன்னன்" என்று கூறி தேர்ப்பாகன் அவரை வணங்கி நின்றான். "சன்னா! இப்பொழுது நான் அரண்மனையை விட்டுப் புறப்படப்போகிறேன். குதிரையை இங்கு கொண்டு வா" என்று கட்டளையிட்டார். சன்னன் தலைவணங்கி குதிரைப் பந்திக்குச் சென்றான்.

சித்தார்த்த குமாரன் தமது குழந்தையைப் பார்க்க, எண்ணி, யசோதரை அரசியார் உறங்குகிற அறையை நோக்கிச்சென்றார். சென்று, ஓசைபடாமல் மெல்லக் கதவைத் திறந்தார். மங்கலான ஒளியைக் கொடுத்துக் கொண்டுவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. விளக்குகளுக்கு இடப்பட்டிருந்த எண்ணெயிலிருந்து இனிய நறுமணம் அவ்வறையில் கமழ்ந்து கொண்டிருந்தது.அவ்வறையில் இருந்த கட்டிலில், மல்லிகைப்பூக்களைத் தூவிய மெல்லிய பஞ்சணையின் மேலே யசோதரை அரசியார், தமது குழந்தையை வலது கையினால் அணைத்துக்கொண்டு கண்ணுறங்கிக் கொண்டிருந்தார்.

சித்தார்த்த குமாரன் அரைக்குள்ளே செல்ல வாயில் நிலையின்மேல் காலை வைத்தார். அப்போது அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. "உள்ளே போய் தேவியின் கையை விலக்கிக் குழந்தையைப் பார்ப்பானானால், தேவி விழித்துக்கொள்வாள்.