பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 35

பொருட்படுத்தாமல் உப்பரிகையினின்றும் இறங்கிக்கீழே வந்தார். பிரயாணத்திற்கு ஆயத்தப்படுத்திய கந்தகன் என்னும் குதிரையைக் கொண்டுவந்து சன்னன் வாயிலில் காத்திருந்தான். சித்தார்த்த குமாரன் குதிரைமேல் அமர்ந்து, சன்னனைக் குதிரையின் வாலைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி தென்கிழக்குப் பக்கமாகக் குதிரையைச் செலுத்தினார்.


கௌதம முனிவரின் துறவு வாழ்க்கை


நாட்டைக் கடந்தது

அன்று ஆனித்திங்கள் வெள்ளுவாநாள் (ஆஷாட பெளர்ணமி). நள்ளிரவு. நகர மக்கள் கண்ணுறங்குகின்றனர். முழுநிலா, பால் போன்ற நிலவை எங்கும் வீசுகிறது. இந்த நள்ளிரவிலே சித்தார்த்த குமாரன் பிரயாணம் செய்கிறார். குதிரைப்பாகன் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.

சித்தார்த்த குமாரனுக்குப் பிரியமான கந்தகன் என்னும் இக்குதிரை, குமாரன் நள்ளிரவில் பிரயாணம் செய்வதை விரும்பாமல், மற்றவர்களை விழித்தெழச் செய்வதுபோல பலமுறை உரத்த சத்தமாகக் கனைத்தது. அந்த ஒலியை யாரும் கேளாதபடி தேவர்கள் தடுத்து விட்டார்கள். குதிரையின் குளம்புகளிலிருந்து 'டக் டக் கென்று ஒலி உண்டாயிற்று. அவ்வொலியையும் யாரும் கேளாதபடி தேவர்கள் தடுத்து விட்டார்கள். நகரத்து வாயிலையடைந்தபோது, மூடப்பட்டிருந்த வாயில் கதவுகளைத் தேவர்கள் திறந்து விட்டார்கள். சித்தார்த்த குமாரன் குதிரையைச் செலுத்தி நகரத்தைவிட்டு வெளிப்பட்டார்.

சாக்கியர்நாடு கோலியர் நாடு மள்ளர்நாடு ஆகிய நாடுகளைக் கடந்து முப்பது யோசனை தூரம் பிரயாணம் செய்தார். கடைசியாக. விடியற்காலையில் அனோமை என்னும் ஆற்றங்கரையையடைந்தார். கரை ஓரத்தில் வந்து தமது காலினால் மெல்ல தட்டிக் குதிரைக்குச் சமிக்ஞை செய்தார். குதிரை துள்ளிப்பாய்ந்து அக்கரையில் நின்றது. சித்தார்த்த குமாரன், குதிரையினின்று இழிந்து வெள்ளிய தூய்மையான ஆற்று மணலிலே அமர்ந்தார்.