பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 / புத்தரின் வரலாறு

சன்னன் வந்து அருகில் நின்றான். "சன்ன, நான் துறவுகொள்ளப் போகிறேன். என்னுடைய ஆடையணிகளையும்குதிரைகளையும் நகரத்திற்குக் கொண்டு போவாயாக" என்று சித்தார்த்த குமாரன் சன்னனிடம் கூறித் தமது ஆடையணிகளைக் கழற்றினார். மனவருத்தம் அடைந்த சன்னன் அவரை வணங்கி, "அரசே, அடியேனும் துறவு கொள்ளுவேன்" என்றான். "சன்ன, வேண்டாம்! இப்போது வேண்டாம், தந்தையாரும் சிறிய தாயாரும் யசோதரையும் நான் துறவுகொண்டதையறியமாட்டார்கள். நீ நகரத்துக்குப்போய் என் செய்தியைக் கூறு. நான் பின்னர் வந்து உனக்குத் துறவு கொடுப்பேன்" என்று கூறி சித்தார்த்த குமாரன் ஆடையணிகளைச் சன்னனிடம் கொடுத்து நகரத்திற்குப் போகச்சொன்னார்.

துறவு பூண்டது

பின்னர் நீண்டு வளர்ந்திருந்த தமது தலைமயிரை இடது கையில் பிடித்துக்கொண்டு வலக்கையில் வாளை எடுத்து அடியோடு அரிந்தார். அவ்வாறே மீசை தாடிகளையும் களைத்தெறிந்தார். இவ்வாறு சித்தார்த்த குமாரன் துறவுகோலம் பூண்டார்.

குதிரைப்பாகள் மனவருத்தத்துடன் நின்றான். சித்தார்த்தர், நகரத்திற்குப் போய் தமது தந்தையிடம் செய்தி கூறும்படிஅவனுக்குக் கட்டளையிட்டார். சன்னன் அழுது கொண்டே அவரை வணங்கி, குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு போகப் புறப்பட்டான். ஆனால், கந்தகன் என்னும் அந்தக் குதிரை நகரவில்லை. அது சித்தார்த்தருடைய கால்களை நக்கி உளம் நிறைந்த அன்போடு தன் கண்களினாலே அவரைப் பார்த்துக்கொண்டு நின்றது. சித்தார்த்தர் எழுந்து நின்று, "நீங்கள் நகரத்திற்குப் போங்கள்" என்று சொல்லிக்கொண்டே வேறிடம் செல்லப் புறப்பட்டார். அப்போதும் கந்தகன் நகராமல் அவர் போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. நெடுந்தூரம் சென்றபின் அவர் கண்ணுக்கு மறைந்துவிட்டார். அப்போது அந்தக் குதிரை அவருடைய பிரிவைத் தாங்கமாட்டாமல் வருத்தத்தோடு கீழே விழுந்தது. உடனே இறந்தது.

சன்னன், மனம் நொந்து அழுதுகொண்டே கபிலவத்து நகரத்தை நோக்கி நடந்தான். அரண்மனையையடைந்து சுத்தோதன அரசரிடம், சித்தார்த்த குமாரன் துறவு பூண்டசெய்தியைக் கூறினான்.