பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 67

சாக்கா டவல மரற்றுக் கவலை
கையா றென்றுக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும்இவ் வகையான் மீட்சி[1]

இவ்வாறு நிதானங்களை சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் இவ்வாறு நிதானம் உரைத்தார்:-

பிறவித்துன்பத்தை நீக்கும் பொருட்டு முயற்சியோடு தியானம் செய்து பாவத்தை நீக்கின யோகியானவர், பௌத்தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்போது உணர்கிறாரோ அப்பொழுதே பேதைமை முதலான காரணங்களினாலே உண்டான துக்கங்களைப் பிரித்து ஆராய்ந்து பார்க்கிறபடியினாலே-அவருடைய ஐயங்கள் நீங்கிவிடுகின்றன.

அதன் பின்னர், இரவின் மூன்றாம் யாமம் வந்தது. அப்போது பகவன் புத்தர் ஊழின்வட்டமாகிய பன்னிருநிதானம் என்னும் தத்துவத்தை தொடக்கத்தில் இருந்து கடைசி வரையிலும், கடைசியிலிருந்து தொடக்கம் வரையிலும் சிந்தித்துப் பார்த்தார். பார்த்த பிறகு, இவ்வாறு உதானம் ஓதினார்:

துக்கங்களை அடக்கிப் பாவங்களை யொழிக்கிற ஆற்றல் உள்ள துறவியானவர், முப்பத்தேழு விதமான தர்மங்களை அறியும்போது. இருள்படலத்தை ஓட்டி ஒளியைப் பரப்புகிற சூரியனைப் போல, மாரனுடைய எல்லாவிதமான சேனைகளையும் ஓட்டி வெற்றி காண்கிறார்.

இரண்டாம் வாரம்

புத்த பதவி யடைந்தபிறகும் ததாகதர், ஆசனத்தை விட்டு எழுந்திராமல் போதிமரத்தின் அடியிலேயே அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட சில தேவர்கள், "ஆசனத்திலிருந்து பகவன் புத்தர் எழுந்திருக்காதபடியினாலே இன்னும் இவர் அடையவேண்டிய நிலைகளும் உண்டுபோலும்" என்று நினைத்தார்கள். இவ்வாறு தேவர்கள் சிலர் எண்ணியதைப் பகவன் புத்தர் அறிந்தார். ஆகவே, அவர் அவர்களுடைய ஐயத்தை நீக்குவதற்காக, ஆசனத்தைவிட்டுக் கிளம்பி ஆகாயத்திலே நின்றார். இதைக்கண்ட தேவர்கள் ஐயம் நீங்கினார்கள்.


  1. மணிமேகலை 30: 119-133. இது, விநயபிடகம் மகாவக்கம் முதல் காண்டத்தில் உள்ள பாலி மொழி வாக்கியத்தின் நேர் மொழி பெயர்ப்பாக அமைந்திருக்கிறது.