பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி. வேங்கடசாமி / 7

நிறமான பாறைகளின் மேலே நடந்து மாளிகை இருந்த வெள்ளிப் பாறைக்கு வந்தது. பாறையின் வடபுறமாக வந்து தும்பிக்கையிலே ஒரு வெண்டாமரைப் பூவை ஏந்திக்கொண்டு பிளிறிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்து மாயாதேவியார் படுத்திருந்த கட்டிலருகில் வந்தது. வந்து, கட்டிலை மூன்று முறை வலமாகச்சுற்றி, தேவியாரின் வலது பக்கமாக அவர் வயிற்றுக்குள் நுழைந்துவிட்டது.

இவ்வாறு மாயாதேவியார் விடியற்காலையில் ஒரு கனவு கண்டார். போதி சத்துவர், தாம் எழுந்தருளியிருந்த துடிதலோகத்தை விட்டு இறங்கிவந்து மாயாதேவியாரின் திருவயிற்றில் கருவாக அமைந்தருளியதைத்தான் தேவியார், வெள்ளை யானைக்கன்று தமது வயிற்றில் நுழைந்ததாக கனவு கண்டார்.

இவ்வாறு கனவு கண்ட மாயாதேவியார் விழித்தெழுந்து தாம் கண்ட கனவை அரசரிடம் கூறினார். சுத்தோதன அரசர், நூல்களைக் கற்றறிந்த அந்தணர் அறுபத்து நால்வரை அழைத்து, அறுசுவை உணவுகளை உண்பித்து, அரசியார்கண்ட கனவை அவர்களுக்குக் கூறி அதன் கருத்து என்னவென்று கேட்டார். கனவை ஆராய்ந்து பார்த்த அந்தணர்கள் அதன் கருத்தைத் தெரிவித்தார்கள். அரசியாருக்குக் கருப்பம் வாய்த்திருப்பதை இக்கனவு தெரிவிக்கிறது; அரசியாருக்கு ஒரு ஆண் மகவு பிறக்கும்; அந்தக் குழந்தை பெரியவனாக வளர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளுமானால் சிறந்த சக்கரவர்த்தியாக விளங்கும்; இல்லறத்தில் புகாமல் துறவறத்தை மேற்கொள்ளுமானால் பெறுதற்கரிய புத்த ஞானம் பெற்று புத்தராக விளங்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

மாயாதேவியாரின் திருவயிற்றிலே கருவாக அமர்ந்த போதி சத்துவர் இளிது வளர்ந்து வந்தார். தேவியாரும் யாதொரு துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு இருந்தார்.

மாயாதேவியார் வயிறு வாய்த்துப் பத்துத் திங்கள் ஆயின. அப்போது அவருக்குத் தமது பெற்றோரைக் காண வேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று. தமது எண்ணத்தை அரசருக்குத் தெரிவித்தார். அரசரும் உடன்பட்டு, கபிலவத்து நகரத்திலிருந்து தேவியாரின் பெற்றோர் வசிக்கும் தேவதகா நகரம் வரையில் சாலைகள் அலங்காரம் செய்வித்தார். பிறகு, தோழியரும் ஏவல் மகளிரும் பரிவாரங்களும் அமைச்சரும் புடை சூழ்ந்து செல்ல, தேவியாரைப் பல்லக்கில் ஏற்றி அவரைத் தாயகத்திற்கு அனுப்பினார். இவ்வாறு தேவதாநகரத்திற்குப் புறப்பட்டுச் சென்ற தேவியார், இடைவழியிலே இருந்த உலும்பினிவனம் என்னும் சோலையை அடைந்தார்.