பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 / புத்தரின் வரலாறு

அன்று வைசாகப் பௌர்ணமி நாள். உலும்பினி வனம் அழகான பூக்கள் நிறைந்து மணம் கமழ்ந்து திவ்வியமாக விளங்கிற்று. குயில் கிளி முதலிய பறவையினங்கள் மரங்களில் அமர்ந்து இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தன. அவை கண்ணுக்கும் காதுக்கும் இனிமை பயந்தன. மலர்களில் தேனைச் சுவைத்த தேனீக்களும் தும்பிகளும் வண்டுகளும் அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தன.

இந்த உலும்பினி வனத்திற் சென்று அவ்வனத்தின் இனிய காட்சிகளைக் காண வேண்டுமென்று மாயாதேவியார் ஆசை கொண்டார். அவர் விரும்பியபடியே அவருடன் சென்றவர் அவரை அவ்வனத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தேவியார் உலும்பினி வனத்தின் இனிய காட்சிகளையும் பூக்களின் வனப்பையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக அந்தத் தோட்டத்தின் ஓரிடத்திலே இருந்த அழகான சாலமரத்தின் அருகில் வந்தார். அந்த மரம் முழுவதும் பூங்கொத்துக்கள் நிறைத்து மலர்ந்து மணங்கமழ்ந்து நின்றது. தேவியார் மரத்தடியில் சென்று அதன் கிளையொன்றைப் பிடிக்கக் கையைத் தூக்கினார். அப்பூங்கிளை அவர் கைக்குத் தாழ்ந்து கொடுத்தது.

அவ்வமயம், அவர் வயிறு வாய்த்துப் பத்துத் திங்கள் நிறைந்து கருவுயிர்க்கும் காலமாயிருந்தது. கர்மஜ வாயு சலித்தது. இதனை அறிந்த அமைச்சரும் பரிவாரங்களும், அரசியாரைச் சூழத் திரைகளை அமைத்து விலகி நின்று காவல் புரிந்தார்கள். தேவியார் சாலமரத்தின் பூங்கிளையை ஒரு கையினால் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கியிருந்தார். இவ்வாறு இருக்கும்போதே அவர் வயிற்றிலிருந்து போதிசத்துவர் குழந்தையாகப் பிறந்தார். தாயும் சேயும் யாதொரு துன்பமும் இல்லாமல் சுகமேயிருந்தார்கள்.

போதி சத்துவர் குழந்தையாகத் திருவவதாரம் செய்தபோது, அநாகாமிக பிரம தேவர்கள்[1] நால்வரும் அக்குழந்தையைப்பொன் வலையிலே ஏந்தினார்கள். சதுர் மகாராஜிக தேவர்கள்[2] நால்வரும் அவர்களிடமிருந்து அக்குழந்தையை ஏற்று அமைச்சர் இடத்தில் கொடுத்தார்கள். அப்போது குழந்தையாகிய போதிசத்துவர் தரையில் இறங்கினார். அவர் அடிவைத்த இடத்தில் தாமரை மலர்கள் தோன்றி அவர் பாதத்தைத் தாங்கின. அக்குழந்தை அந்தப் பூக்களின் மேலே

ஏழு அடி நடந்தது. "நான் உலகத்தில் பெரியவன்;உயர்ந்தவன்;


  1. அநாகாமிக பிரமதேவர்-தூயமனமுடைய மகாபிரமர்
  2. சதுர் மகாராஜிக தேவர் - நான்கு திக்குப்பாலகர்; திருதராட்டிரன், விருபாக்கன். விருளாக்ஷன். வைசிரவணன் என்பவர்