உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 / புத்தரின் வரலாறு

"சுவாமி! எங்கள் மனைவியரோடு விளையாட்டின் பொருட்டு இங்கே வந்தோம். மனைவியில்லாத ஒருவர் ஒரு தாசியுடன் வந்தார். அவள் நகைகளை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். அதற்காக அவளைத் தேடுகிறோம்" என்று கூறினார்கள்.

"குழந்தைகளே! தன்னைத் தேடுவது உத்தமமானதா, அல்லது, அயலாள் ஒருத்தியைத் தேடுவது உத்தமமானதா?" என்று வினவினார்.

"சுவாமி! நம்மை நாமே தேடிக்கொள்வது உத்தமமானது." என்றனர்.

"அப்படியானால், குழந்தைகளே! உட்காருங்கள். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கிறேன்" என்று அருளினார். அவர்களும் "அப்படியே, சுவாமி!" என்று அவரை வணங்கி ஒருபுறமாக உட்கார்ந்தார்கள்.

அப்போது பகவன் புத்தர் தானகாதை, சீலகாதை முதலிய காதைகளை முறைப்படி உபதேசம் செய்தார்.அதைக்கேட்டு மகிழ்ந்து மனத்தூய்மையடைந்தார்கள். பிறகு, நான்கு விதமான வாய்மைத் தத்துவத்தைப் போதித்தார். இத்தத்துவோபதேசத்தைக் கேட்ட அவர்களுக்கு அறிவுக்கண் விளங்கிற்று. சிலர் கரோத்தாபத்தி பலன் அடைந்தார்கள். சிலர் சத்ருகாமி பலனையும், சிலர் அனாகாமி பலனையும் அடைந்தார்கள்.

இவ்வாறு உபதேசங்கேட்டு உயர்ந்த நிலையையடைந்த பத்ர வர்க்கியர், பகவன் புத்தரை வணங்கிச் சந்தியாசம் கொடுக்கும்படிக் கேட்டார்கள். பகவர் ஏஹிபிகிரமத்தினாலே சந்நியாசமும் உபசம்பதாவும் அவர்களுக்குக் கொடுத்தார். பின்னர், இந்த முப்பது பிக்குகளையும் பல கிராமங்களுக்குத் தர்ம தூத வேலைக்காக அனுப்பித் தாம் தனியாக உருவேல கிராமத்திற்குச் சென்றார்.

ஜடாதர தபசிகள்

அக்காலத்திலே உருவேல ஜனபதத்தில் நேரஞ்சர நதிக்கரையில் வெவ்வேறு இடங்களில் ஆசிரமங்களை அமைத்துக்கொண்டு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். இவர்களில் உருவேல காசிபர் மூத்தவர். அவருக்கு ஐந்நூறு சீடர்கள் இருந்தார்கள். இரண்டாவது சகோதரருக்கு நாதி காசிபர் என்பது பெயர். இவருக்கு முன்னூறு சீடர்கள் இருந்தார்கள். இளையவருக்கு கயாகாசிபர் என்பது பெயர். இவருக்கு இருநூறு சீடர்கள் இருந்தார்கள். இவர்கள் சடையை வளர்த்துத் தீ வழிபாடு செய்து வந்தனர்.