பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 91

பகவன் புத்தர், உருவேல காசிபரிடம் சென்று அவரிடம் பேசினார். பிறகு, "காசிபரே! நான் இருப்பது தங்களுக்குக் கஷ்டமில்லாமல் இருந்தால், உம்முடைய எக்யசாலையில் ஒரு இரவு தங்குகிறேன்" என்று கூறினார்.

"மகா சிரமணரே! தாங்கள் தங்குவது எனக்குக் கஷ்டம் அல்ல. ஆனால், அங்கு ஒரு குரூரமான பாம்பு உண்டு. அது உமக்குத் தீங்கு செய்யக் கூடும் என்று அஞ்சுகிறேன்?" என்றார் காசிபர்.

"அதனால் எனக்கு ஒன்றும் தீங்கு நேராது. எக்கியசாலையில் நான் தங்க உத்தரவு கொடுங்கள்" என்று கேட்டார் பகவர். அவரும் உத்தரவு கொடுத்தார்.

பகவன் புத்தர் எக்கியசாலைக்குச் சென்று புல் ஆசனம் அமைத்து அதில் அமர்ந்தார். அப்போது அங்கிருந்த பெரிய நாகப்பாம்பு கோபங்கொண்டு மூக்கின் வழியாக நச்சுப்புகையை வீசிற்று. அந்த நச்சுப் புகை பட்டால் சாதாரண ஆட்களின் தோல், சதை, எலும்புகள் கருகிக் கறுத்துப்போகும். ஆனால், பகவன் புத்தரின் யோகத்தின் சக்தியினாலே அந்த நச்சுப்புகை அவரை ஒன்றும் செய்யவில்லை. பிறகு, பகவர் " இந்தப் பாம்பின் கொடுமையை அடக்குவேன்" என்று கருதிக்கொண்டு, தமது இருத்தி சக்தியினாலே அங்கு ஒருவித புகையை உண்டாக்கினார். அதனைக் கண்ட நாகப்பாம்பு மிகவும் சினங்கொண்டு அனலைக் கக்கி வீசியது. புத்தர், தமது இருத்தி சக்தியினாலே அனலை உண்டாக்கினார். அதனால் அந்த எக்கிய சாலை தீப்பற்றி எரிவதுபோலக் காணப்பட்டது. அதனைக் கண்ட தாபசகர்கள் "ஐயோ! அழகான தேகமுள்ள சிரமணருக்கு நாகப்பாம்பினாலே துன்பம் உண்டாகிறது" என்று பேசிக்கொண்டார்கள்.

இரவு கழிந்து பொழுதுவிடிந்தவுடன், ஆற்றலை இழந்து வாடிக் கிடந்த நாகப்பாம்பைப் பகவன் புத்தர் எடுத்துத் தமது பாத்திரத்தின் உள்ளே போட்டுக்கொண்டுபோய், "உருவேல காசிபரே! இதே உம்முடைய நாகப்பாம்பு. அதனுடைய ஒளி என்னுடைய ஒளியிலே அடங்கிப் போய் விட்டது" என்று சொல்லி அவருக்கு அதைக் காட்டினார். அதைக்கண்ட உருவேல காசிபர், 'அடங்காத இருத்தி சக்தியுடைய இந்தக்கொடிய நாகப்பாம்பை அடக்கிய இந்தச் சிரமணர் அதிக இருத்தி சக்தியுள்ளவரே. ஆனால், இவர் என்னைப் போன்று அர்ஹந்த நிலையையடைந்தவர் அல்லர்" என்று தமக்குள் நினைத்துக் கொண்டார்.