பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 / புத்தரின் வரலாறு

வந்தார்கள். அவ்வமயம் பகவன் புத்தர் தமது சீடர்களைத் தர்மதூத வேலைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பியிருந்தார். இவர்களில் அஸ்ஸஜிதேரர் இராசகிருத நகரம் வந்து மிகச்சாந்தியோடு பிக்ஷைக்காகப் போவதை உபதிஸ்ஸ பரிவிராசகன் கண்டார். கண்டு, "இவர் கட்டாயம் அர்ஹந்தராக இருக்கவேண்டும். அல்லது அர்ஹந்த பதவிக்கு முயற்சி செய்தவராக இருக்க வேண்டும். எதற்கும் இவரை அணுகிக் கேட்போம்" என்று தமக்குள் சிந்தித்தார்.

பிக்ஷைக்குப் போகும்போது பேசுவது சரியல்ல என்று நினைத்து அவர் பின்னே சென்றார். அஸ்ஸஜிதேரர் வீடுகளில் பிக்ஷை ஏற்று நகருக்கு வெளியேவந்து ஒரு இடத்தில் உட்கார நினைத்தார். அப்போது உபதிஸ்ஸர் தம்மிடம் இருந்த ஆசனத்தை விரித்து அதில் உட்காரச் சொன்னார். தேரர் அதில் அமர்ந்து உணவை உண்டார். உண்ட பிறகு உபதிஸ்ஸர் தமது குண்டிகையிலிருந்து நீரைக் கொடுத்துச் சுத்தம் செய்வித்தார்; பிறகு அவரோடு பேசத் தொடங்கினார்.

"நண்பரே! தங்களுடைய கண் காது முதலிய புலன்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. உடம்பின் தோற்றமும் நிறமும் நன்றாக உள்ளன. தாங்கள் யாரிடத்தில் சந்நியாசம் பெற்றீர்கள்?" என்று கேட்டார். அஸ்ஸஜிதேரர், 'இந்தப் பரிவிராசிகர்கள் பௌத்த மதத்திற்கு விரோதிகள். ஆகையால், இவருக்குப் பௌத்த மதத்தின் சிறந்த கொள்கையைக் காட்ட வேண்டும்' என்று தமக்குள் நினைத்துத் தான் புதிதாகப் பௌத்த மதத்தில் சேர்ந்தவர் என்பதைக் கூறினார்.

"நான் திஸ்ஸன் என்றும் பெயருள்ளவன். சுருக்கமாகவோ விரிவாகவோதயவு செய்து உமது போதனையை எனக்குக் கூறுங்கள். சுருக்கமாகக் கூறினாலும் அதைப் பத்துப் பத்து நூறுபங்காகத் தெரிந்து கொள்வது என்னுடைய கடமையாகும்" என்று உபதிஸ்ஸர் கூறினார்.

அஸ்ஸிஜதேரர், புத்தருடைய உபதேசங்களையெல்லாம் அடக்கிச் சுருக்கிக் கூறினார். அதைக் கேட்ட உபதிஸ்ஸர், "சுவாமி! உமது சாஸ்தா எங்கேயிருக்கிறார்?" என்று கேட்க, "சகோதரரே! அவர் வெளுவனத்தில் எழுந்தருளியிருக்கிறார்!" என்று தேரர் கூறினார்.

"தாங்கள் முன்னே போங்கள்: என்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு அவ்விடம் வருகிறேன்" என்று அவரை வணங்கி அனுப்பிவிட்டு உபதிஸ்ஸர், பரிவிராசக ஆராமத்திற்குச் சென்றார். சென்று தாம் புதிய குருவைக்கண்ட செய்தியைக் கோலிதருக்குக் கூறி அவரை வெளுவன ஆராமத்திற்கு அழைத்தார். அவரும் புறப்பட்டார். இருநூற்றைம்பது பரிவிராசகருக்கும் இதைக்