பக்கம்:பொன் விலங்கு.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 பொன் விலங்கு

வேடிக்கை யானதும், ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது ஆழ்ந்த துயரம் தெரியக்கூடியதுமான ஒரு வாக்கியத்தை சத்தியமூர்த்தியிடம் கூறினான் அவன்:

'கடைசியில் கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்தே விட்டார்கள் என்று சொல்'

இதைக் கேட்டு சத்தியமூர்த்தி நண்பனுக்குப் பதில் சொல்லாமல் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தான். மனத்துக்குப் பிடித்தமான வாத்தியத்தில் மனத்துக்குப் பிடித்தமான இராகத்தை வாசித்ததுபோல் மோகினியோடு உரையாடிய வேளைகளை எல்லாம் இப்போது நினைத்து மனமுருகினான் அவன். அவன்பதில் பேசாமல் சும்மா இருப்பதைப் பார்த்துக் குமரப்பனே மேலும் கேட்டான்.

"என்ன? பதில் பேசாமல் திகைத்து உட்கார்ந்து விட்டாய்?"

'பதில் பேச என்ன இருக்கிறது? கூண்டில் அடைபட்டு விட்டதாகச் சொல்கிறாயே, அந்தக் கிளியின் மனத்தில் உள்ள நினைவுகள் ஒவ்வொன்றும் ஒரு சோகக் கதையாயிருக்கிறது..."

“ஒவ்வொரு மனத்திலும் ஒரு சோகக் கதை உண்டு. அது கதையாக வெளிப்படாத வரை உலகத்துக்குக் கிடைக்க வேண்டிய சுவாரசியமான அநுபவம் ஒன்று நஷ்டமாகி விடுகிறது சத்தியம்?..."

"ஆனால் மோகினியின் சோகம், கதைகளை எல்லாம் விடப் பெரியது குமரப்பன்?"

"என்ன செய்யலாம்? வசீகரமான நினைவுகளோடு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறோம். ஆனால், அங்கு மிகவும் குரூரமான நினைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியாக இருந்து சிந்திக்கும்போது அழகாயிருக்கிற இந்த வாழ்க்கையை-பலரோடு கலந்து வாழும் போது-தடைகளும்-இடையூறும் நிறைந்ததாயிருப்பதை மிகவும் கசப்போடு நீயும் நானும் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் மேலே என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கித் தளர்ந்துதான் நிற்க வேண்டியிருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/504&oldid=595757" இலிருந்து மீள்விக்கப்பட்டது