பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 187

வங்கள் அதன் அடியில் நசுக்குண்டு நசித்துப் போய் விடுவன.

‘ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி.
விலங்கும் தம்முள் வெரூஉம்பகை நீக்கி,
உடங்குயிர் வாழ்க என்(று) உள்ளம் கசிந்துகத்
தொன்று காலத்து நின்(று) அறம் உரைத்த’[1]

(மாதுயர் எவ்வம்-மிகுந்த துன்பம். விலங்கு-மிருகங்கள். வெரூஉம்-பயப்படும். உடங்குயிர் வாழ்க-உயிர் உடங்கு வாழ்க-உயிர்கள் யாவும் தம்முள் வேற்றுமையில்லாமல் ஒத்து வாழட்டும். கசிந்துக-இரங்கிக் கரைய.)

இந்தப் பெருமையைப் பின்னால் எழுந்த சரிதைகளும் காவியங்களும் விரிவாக விளக்கிக் கூறுகின்றன.

பிறவிக் கடலில் விழுந்து தவிக்கும் மக்களுக்கு அப் பெருங்கடலைத் தாண்டிச் செல்வதற்கு ஏற்ற ‘அறவி நாவாய்'–தருமமாகிய ஓடம்-கிடைத்து விட்டது!

தருமத் தேர்

பிறவிக் காட்டினுள் சிக்கி அலையும் மக்களுக்குத் கருமத் தேர் கிடைத்து விட்டது! காசி நகரிலே, இஸிபதனச் சோலையிலிருந்து அந்த இரதம் புறப்பட்டு விட்டது! ‘தரும இரதம்! ஞானமடைந்து நம்பிக்கை கொண்டவர் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி ஏறிச் செல்லும் இரதம் அது. அது நீதி நெறிமுறைகள் என்னும் பலகைகளால் செய்யப்பெற்றது. அதன் ஏர்க்காலாக விளங்குவது அந்தக் கரணம் அல்லது மனச்சான்று;


  1. மணிமேகலை’.