பக்கம்:மேனகா 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மேனகா

வீறிட்டுக் கூற, அவனது பரிதாபகரமான குரலானது, அவர்களது மனதில் அம்பைப்போல சுருக்கென்று தைத்தது. இருவரும் நெருப்பின் மீதிருப்பவரைப்போல தத்தளித்தனர். உடனே கனகம்மாள், “அவள் எங்கே இருக்கிறாள்?” என்ற கேட்க, அவன் அவ்விருவரையும் அருகிலிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். அங்கு தங்கம்மாள் ஒரு கட்டிலின் மீது கிடத்தப் பெற்றிருந்தாள். செவிகள், நாசி, சிரம், கைகள், கால்கள் முதலிய இடங்களில் பெருத்த இரணக்கட்டு களிருந்தன. அவள் கண்களைத் திறவாமல் உணர்வற்று, அசைவற்றுக் கிடந்தாள். அவளைக் கண்ட இருவரும் ஆவலோடு பாய்ந்து ஒடிக் கட்டிலையடைந்து அவளை உற்று நோக்கினர். அதற்குள் கிட்டன் தனது வாயில் கையை வைத்து மூடி தங்கத்திற்கருகில் பேசவேண்டாமென்று சைகை செய்தான்; டாக்டர் துரை அவ்வாறு உத்தரவு செய்திருப்பதாகத் தாழ்ந்த குரலில் இரகசியமாகக் கூறினான். என்றாலும், கனகம்மாள் தனது ஆத்திரத்தில் எதையும் கவனியாமல், தங்கம்மாளின் மார்பு, கை, கால் முதலிய இடங்களை அன்போடு தடவிப் பார்த்தாள். உடம்பில் சூடுமில்லை, குளிர்ச்சியுமில்லை, ஹிருதயத்தின் அடிப்பும் காணப்படவில்லை, சுவாசம் வெளிப்பட்டதும், உட்சென்றும் புலப்படவில்லை. அவளது உடம்பில் உயிரிருந்ததா இல்லையா என்பது தோன்ற வில்லை; மிகவும் சந்தேகித்த கனகம்மாள் கிட்டனைப் பார்த்துத் தணிவான குரலில், “இவள் பேசவே இல்லையா?” என்றாள்; “ஆம்; ராத்திரி அடிபட்ட முதல் இப்படியே இருக்கிறாள்; கண்ணைத் திறக்கவுமில்லை; பேசவுமில்லை; அசையவுமில்லை; மூச்சு விடவுமில்லை” என்றான் கிட்டன். அதைக் கேட்ட அவ்விருவரும் திகைத்து அப்படியே திக்பிரமை கொண்டனர். மூன்று நாட்களாக ஆகாரம், தண்ணீர், துயில், ஒய்வு முதலிய எதையும் கொள்ளாமையாலும், சென்னையில் பயங்கரமான பல சம்பவங்களிற் பட்டு தத்தளித்து வந்தமையாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/107&oldid=1251986" இலிருந்து மீள்விக்கப்பட்டது