பக்கம்:மேனகா 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

131

வைத்துக் கட்டச் செய்தார்; ஏதோ ஒருவகையான திராவகத்தைத் தயாரித்து மூக்கின் வழியாக பீச்சாங்குழல் வைத்து அம்மருந்தை உட்புறம் செலுத்தினார். இன்னம் பல முக்கிய சிகிச்சைகளைச் செய்தார்; வெளியிலிருந்த கிட்டன் முதலியோரை உள்ளே வரவழைத்தார்; தங்கம்மாள் முன்னிருந்த மாதிரியே தொட்டிலில் எவ்வித மாறுபாடின்றியே கிடந்தாள். துரை அவர்களைப் பார்த்து, “சரி, பணமெங்கே?” என்றார். உடனே கனகம்மாள், “நாங்கள் மிகவும் அவசரமாக முன்னால் வந்துவிட்டோம். இதோ அடுத்த வண்டியில், இந்தப் பெண்ணின் புருஷன் பணத்தோடு வருவார். அவசரமாகச் செய்ய வேண்டிய காரியங்கள் நடக்கட்டும்; பணத்தைப் பற்றிக் கொஞ்சமும் யோசனை செய்ய வேண்டாம். இதோ, வருகிறது” என்றாள். அதைக் கேட்ட துரைக்குப் பெருத்த கோப மூண்டது. “நல்ல காரியம் செய்தீர்கள்! பெண்ணின் புருஷனில்லாமல் நீங்கள் மாத்திரமா வந்தீர்கள்! மார்பைக் கீறி ஆபரேஷன் செய்யவேண்டும். இன்று சாயுங்காலத்திற்குள் இதைச் சரிப்படுத்தாவிட்டால், உயிர் போய்விடும்; உடம்பு மிகவும் அபாயகரமான நிலைமையில் இருக்கிறது. எலும்புத்துண்டுகள் ஹிருதயத்தில் குத்திக்கொண் டிருக்கின்றன. ஹிருதயத்திலிருந்து வரும் இரத்த ஒட்டம் தாறுமாறா யிருக்கிறது; இன்று சாயுங்காலத்துக்குள் இரத்த ஒட்டமே நின்றுபோம்; உடனே மார்பைக் கீறி எலும்பை எடுக்க வேண்டும்; மார்பைக் கீறுவதில் உயிர் போனாலும் போய்விடும். அப்படி உயிர் போனால் என்னை உத்திரவாதி யாக ஆக்குவதில்லை யென்று பெண்ணின் புருஷன் முதலில் எனக்கு ஒரு பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும். பணத்தையும் நீங்கள் உடனே கொடுக்கவேண்டும். பெண்ணின் புருஷனில்லாமல் நீங்கள் ஏன் வந்தீர்கள்? பெண்ணை எடுத்துக்கொண்டு போங்கள்” என்று ஆத்திரத்கோடு மொழிந்தார். கனகம்மாள் திகைப்பும் அச்சமு மடைந்து, “ஐயா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/132&oldid=1252014" இலிருந்து மீள்விக்கப்பட்டது