உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

மேனகா

மாற்றும்போது ரூபாய்கள் கலகலவென்று ஒசை செய்ததைப் பலர் கேட்டு, யாரோ பெரிய மனிதர் பெருத்த பண மூட்டையோடு ஏதோ வியாபாரத்தின் பொருட்டு செல்கிறாரென்று நினைத்துக்கொண்டனர். கடைசியில் சாம்பசிவம் கீழே உட்கார்ந்துகொள்ள நினைத்தார். அவர் முதல்நாட் பகலில் போஜனம் செய்தவர்; மூன்று நாட்களாக கண்களையே மூடி யறியாதவர்; பெண்ணையும், மனைவியையும் , மருமகப்பிள்ளையையும் நினைத்து நினைத்துச் சோர்வடைந்திருந்தார். அவரது மூளை முற்றிலும் குழம்பிக் போயிருந்தது. அப்போதைக்கப்போது அவரது தெளிந்த அறிவும் பிறழ்ந்துகொண்டே வந்தது. தேகமும், மனமும் கட்டினில் நில்லாமல் தவித்தன. அந்த நிலைமையில் அவர் மூன்றாவது வகுப்பு வழிப்போக்கர்கள் தங்கும் இடத்திற்குச் சென்று கீழே உட்கார்ந்துகொண்டார். அந்த இடமோ மாட்டுக் கொட்டிலைப்போல இருந்தது. அதில் குப்பை, செத்தை, வெற்றிலைப் பாக்குத் தாம்பூலம், வாழைப்பழத்தோல், பட்டாணிக் கடலைத் தோல் முதலிய சாமான்கள் நிறைந்திருந்தன. மேலே ஆறுபட்டை லாந்தலொன்று முணுக்கு முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அதில் எரிந்துகொண்டிருந்த சுடர் எங்கிருந்த தென்பதை இன்னொரு விளக்கின் உதவியாலேயே அறிதல் வேண்டும்; அங்கு அப்போது வேறு எவரும் இருக்கவில்லை. சாம்பசிவம் கீழே உட்காந்தவுடன், அவரது தேகத்தில் களைப்பு மேலிட்டது. ஆகையால், படுத்துக்கொள்ள வேண்டுமென்னும் விருப்ப முண்டாயிற்று; தலையணையைப் போல மிகவும் பருமனாயிருந்த பண மூட்டையைத் தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்தார். அந்தப்பணமே தங்களது உயிராதலால் அதை ஜாக்கிரதையாகக் கொண்டுபோக வேண்டுமே யென்னும் கவலை கொண்டவராய், படுத்தபடியே தமது இரண்டு கைகளாலும் மூட்டையை அனைத்து இரு கைகளின் விரல்களையும் ஒன்றாகப் பின்னிக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/141&oldid=1252023" இலிருந்து மீள்விக்கப்பட்டது