உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

143

மூளையை அந்தப் பயங்கரமான அதிர்ச்சி வலுவாகத் தாக்கி சின்னாபின்னமாக்கிவிட்டது. அது எந்த இடம் என்பதும், தாம் யாரென்பதும், எங்கிருக்கிறோ மென்பதும் அவருக்குத் தோன்றவில்லை. அவரது பழைய நினைவுகளே மறைந்து போய், புத்தியும் பேதுற்றது; அவர் உண்மையில் சித்தப்பிரமை கொண்டுவிட்டார். கீழே விரிக்கப்பட்டிருந்த அங்க வஸ்திரத்தையும் எடுக்காமல் எழுந்து இடுப்புத் துணியோடு வெளியில் நடந்தார்; எங்கும் இருள் சூழ்ந்திருந்தது; அந்த ஊருக்கு வடக்குத் திசையில் சென்னை இருந்தது. அவர் அந்த ஊருக்குத் தெற்குத் திசையாக நடந்து வயல்களிலும் வரப்புகளிலும் விழுந்தெழுந்து போக ஆரம்பித்தார்; தாம் இன்னவிடத்திற்குத் தான் போகி றோமென்பதை அறியாமல் பைத்தியங்கொண்டு போய்விட்டார்.

அவரது காலடியிற் படுத்திருந்தவளே நாயைப் போல அவரது உள்ளங்காலை நக்கிவிட்டு, அவர் எழுந்திருக்கும் சமயத்தில் அப்பால் நகர்ந்து படுத்துக் குறட்டை விடுவதாகப் பாசாங்கு செய்தாள். அவர் எழுந்து கால்பக்கம் பார்த்தபோது, தலைப்பாகத்தில் தயாராக இருந்த மனிதன் மூட்டையை எடுத்துக்கொண்டு ஒசையின்றி விரைவாகப் போய்விட்டான்; ஸ்டேஷன் மாஸ்டர் சென்னைக்கு இப்போது வண்டி கிடையாதென்று சாம்பசிவத்தினிடம் சொன்ன பிறகு அவர் பணமூட்டையைத் தூக்கிக்கொண்டு வண்டிக்காக அலைந்த போது, பணம் கலகலவென்று ஒசை செய்ததென்று சொன்னோமல்லவா? அப்போது அதைக் கவனித்திருந்த ஒரு போர்ட்டரே தன் மனைவியின் உதவியால் அவ்வளவு சாமர்த்தியமாகத் திருடிக்கொண்டு போனவன்.


★★★★★★★★★
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/144&oldid=1252026" இலிருந்து மீள்விக்கப்பட்டது