உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மேனகா

ஒருவகையான குறுகுறுப்பு உண்டாயிற்று; ஒரு நாய் தனது நாக்கால் நக்குவதால் உண்டாகும் குறுகுறுப்பும் கூச்சமும் ஒருவகையான இன்பமும் துன்பமும் கலந்து தோன்றின. அதனாலேயே அவரது ஆழ்ந்ததுயில் கலைந்தது. மேன்மேலும் அந்த இன்பகரமான உணர்ச்சி அதிகரித்துத் தோன்றியது. அது கனவோ என்று அவர் நினைத்தார்; அதனாலுண்டான குறுகுறுப்பைத் தாங்கமாட்டாது அவர் சிறிது நேரம் தவித்தார். ஏதோ நாய் தான் அவ்வாறு தமது காலை நக்குவதாக நினைத்து “சூ” என்று அதட்டிக்கொண்டு சடக்கென்று எழுந்து உட்கார்ந்து தமது கண்களைத் துடைத்துக் கொண்டு கால்பக்கம் பார்த்தார். நாய் காணப்படவில்லை. அவரது காலடியில் படுத்திருந்த ஸ்திரீ குறட்டை விட்டுத் துயின்றுகொண்டிருந்தாள். ஒருகால் நாய் ஒடிப்போயிருக்குமோ வென்று அவர் நினைத்தார். ஆனால், அவ்வளவு சீக்கிரமாக அது ஒடி மறைந்து போனதைப் பற்றி வியப்படைந்த வராய் முன்போலவே படுத்துக்கொண்டார். அவர் மூட்டையின் மேல் வைக்கப்போன தலை கருங்கல் தரையில் படேரென்று மொத்துண்டது. மூட்டை அப்பால் நழுவி போயிருக்குமோ வென்று கைகளால் தரையைத் தடவி மூட்டையைத் தேடினார். அது கைகளில் தட்டுப்படவில்லை. திடுக்கிட்டு, பெரிதும் வியப்படைந்தவராய் சாம்பசிவம் எழுந்து தலைப் பக்கம் பார்த்தார். பணமூட்டையும் காணப்பட வில்லை, அங்கு படுத்திருந்த மனிதரும் காணப்படவில்லை. நாற் புறங்களையும் சுற்றிப் பார்த்தார். எங்கும் ஒரு மனிதராகிலும் காணப்படவில்லை. மூட்டை போன விடமும் தெரியவில்லை. தமது காலடியில் பெண்பிள்ளை மாத்திரம் குறட்டை விட்டு நன்றாகத் துங்கிக் கொண்டிருந்தாள். அவளிடமும் பணமூட்டை காணப்படவில்லை. தாம் கனவிலிருக்கிறோமோ, அல்லது விழித்திருக்கிறோமோ வென்று சந்தேகப்பட்டார். இரண்டொரு நிமிஷ நேரம் வரையில் உருட்டி உருட்டி விழித்து. நாற்புறங்களையும் பார்த்தார். மிகவும் குழம்பி சிதறிப்போய்க்கிடந்த அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/143&oldid=1252025" இலிருந்து மீள்விக்கப்பட்டது