பக்கம்:மேனகா 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

179

வெளியில் பரப்பினார். ஒலைச்சுவடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைச் சுழற்றி வெறுவெளியில் ஏதோ சக்கரம் போடுவதற்காகக் கையை ஆட்டி, கண்ணை மூடிக்கொண்டு முணுமுணுத்தார். அவ்வாறு கால் நாழிகை நேரம் சென்றது; அவர் உடனே கண்களைத் திறந்து கொண்டு, “அல்லா பெரியவன். ஆண்டவன் பெரியவன். உம்முடைய மாமனார் பிராது எழுதிப் போலீசுக்கு அனுப்பிவிட்டார். நீர் ரகசியமாகக் கொணர்ந்த பெண்ணின் புருஷன் மோட்டார் வண்டியில் அறைபட்டு வைத்திய சாலையில் கிடக்கிறான். அவன் இன்னம் இரண்டொரு நாளில் வீட்டுக்கு வரப்போகிறான். இன்னமும் உம்முடைய மாமனார் வீட்டிலிருக்கும் அந்த பிராமணப் பெண், புருஷன் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், போய்ச்சேரப்போகிறாள். அதன் பிறகு போலீசார் கேசை நடத்தப்போகிறார்கள். நீர் நாகைப்பட்டணத்தில் இருப்பதாக நினைத்து உம்மைப்பிடித்து வர போலீசார் அந்த ஊருக்குப் போயிருக்கிறார்கள். உம்முடைய மனைவியும் இனி உம்மிடம் வரமாட்டாள். நீர் துர்நடத்தையுள்ளவரென்று நினைத்து அவர்கள் உம்முடைய உறவு வேண்டாமென்று தள்ளிவிட்டார்கள்” என்றார்.

அதைக் கேட்ட நைனா முகம்மது வியப்பும் திகைப்பு மடைந்து, அச்சத்தினால் நடுநடுங்கிப்போனான். “மிகுந்த நற்குணமும், என்மேல் கரைகடந்த பிரியமும் கொண்ட என் மனைவி நூர்ஜஹான் கூட இதற்கு இணங்கினாளா? அதை மாத்திரம் என் மனம் நம்பமாட்டேனென்கிறது” என்று கூறினாள்.

மந்திரவாதி:- நீர் நம்பினாலும் சரி; நம்பாவிட்டாலும் சரி; உண்மை அதுதான். பெண்டுகளின் உண்மையான குணம் உமக்குத் தெரியாது. தங்களுடைய புருஷன் விஷயத்தில் அவர்கள் தங்களுடைய உயிரைக்கூடக் கொடுத்துவிடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/180&oldid=1252338" இலிருந்து மீள்விக்கப்பட்டது