பக்கம்:மேனகா 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மேனகா

ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். மேனகா தனது சுய உணர்வுடன் இருந்தாளாயினும் , அயர்வினால் வாய் திறந்து பேசமாட்டாமல் கண்களை மூடிக்கொண்டே படுத்திருந்தாள். மணி ஆறுக்கு மேலும் நகர ஆரம்பித்தது. ஆறே கால், ஆறரை, ஆறேமுக்காலும் ஆனது; நூர்ஜஹானது ஆச்சரியம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மணி ஏழு அடித்தது. வாசலில் மோட்டார் வண்டி, ‘கிர்’ றென்று வந்து நின்றது. நூர்ஜஹான் எழுந்து வந்தாள். விரைவாக உட்புறம் நுழைந்த துரைஸானி, “நூர்ஜஹான்! மன்னிக்க வேண்டும். உன்னுடைய வண்டி ஐந்தரை மணிக்கு முன்னாகவே வந்து விட்டது. நான் புறப்படப்போன சமயத்தில் மிகவும் ஆபத்தான நிலைமையில் ஒருவர் கொண்டுவரப்பட்டார்; ஆகையால் நான் வரக்கூடாமல் போய்விட்டது. அவர் மேல் மோட்டார்வண்டி ஏறிவிட்டதாம். அவர் பிழைப்பாரோ மாட்டாரோவென்னும் நிலைமையில் வந்தார்; எங்கள் வைத்திய சாலையில் தலைமை உத்தி யோகஸ்தரான துரை உடனே அந்த மனிதருக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைகளைச் செய்தார். அவருடன் நானும் கூட எப்போதும் இருக்க வேண்டும் ஆகையால் இதற்குமுன் வரக்கூடாமல் போய்விட்டது. இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படி இருக்கிறது? அவசரமாக வண்டி அனுப்பினாயே” என்று சொல்லிக் கொண்டே மேனகாவின் நாடியைச் சோதனை செய்தாள்.

அப்போது நூர்ஜஹான், “எவ்விடத்தில் வண்டி ஏறியது?” என்றாள்.

துரை:- கடற்கரைப் பாதையில் சென்னை துரைத்தனத்தாரின் சர்வகலாசாலைக் கெதிரில் ஐந்து மணிக்கு என்றாள்.

நூர்:- அவர் பிழைத்தாரோ இல்லையோ?

துரை:- ஏது! பிழைப்பது சந்தேகம்! உடம்பிலுள்ள இரத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/22&oldid=1251486" இலிருந்து மீள்விக்கப்பட்டது