பக்கம்:மேனகா 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேய்க் கூத்து

235

சன்மானம் வழங்கினார். நிற்க, அந்தப் பங்களாவின் வாடகைக்காக நூற்றைம்பது ரூபாயை நாகைப்பட்டணத்துக்கு இரகசியமாக மணியார்டரும் அனுப்பிவிட்டார். மிகுதிப் பணத்தை அவர் தமது செலவுக்காகப் பத்திரமாக வைத்துக் கொண்டார். வராகசாமியை அழைத்துவந்து, கும்பகோணம் வரதாச்சாரியாரின் பெண்ணை அவனுக்கு மணம்புரிந்து வைத்துவிட்டு, மறுநாளே எங்கேயாகிலும் ஒடிப்போக நினைத்து ஐயர் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தாம் மேனகாவை விற்றதும், ஒரே இரவில் பதினாயிரம் ரூபாயைப் பறிகொடுத்ததும், தண்டவாளத்தில் இரவு முற்றிலும் நரகவேதனை அநுபவித்ததும், தெய்வ ரம்பையைப் போலத் தோன்றிய தாசி கமலத்தை அடைய விருந்த பெரும் பாக்கியம் தமக்குக் கிட்டாமல் தடைப்பட்டுப் போனதும், தாம் பிறகு பொய்ப் பத்திரம் செய்ய நேர்ந்ததும் ஒன்றன் பின்னொன்றாக அவரது மனத்தில் தோன்றி அவரை ஓயாமல் வதைத்தன வேனும், அவர் அவற்றை ஒரு சிறிதும் வெளிக்காட்டாமல், அவர்களோடு கூடவிருந்து நாட்டிய மாடும் தேவடியாள் களுக்குப்பின்னால் தொடர்ந்து சென்று பாட்டுப்பாடித் தாளம் போடும் நட்டுவனைப்போல நடித்து வந்தார்; பெருந்தேவியம்மாள், கோமளம் ஆகிய இருவருடன் “நிலாப்பூச்சி”, “நிழல் பூச்சி”, “ஒளிந்து பிடித்தல்” முதலிய விளையாட்டுகளை நடத்தினார். பெருந்தேவியம்மாள் தன்னை முற்றிலும் மறந்தவளாய் வாய் ஒயாமல் ஜாவளிப் பாட்டுகளை வாரி வாரி, சண்டமாருதமாய் வீசிக் கொண்டே இருந்தாள். கோமளம், தனக்குத் தென்னைமரத்தில் ஏறத் தெரியுமென்பதை மற்ற இருவருக்கும் எதிரில் நிதரிசனமாகச் செய்து காட்டி தோள் தட்டினாள். தாமே பெரியவ ரென்றும், தமது புத்திசாலித்தனத்தினால், பெருத்த தந்திரம் செய்து, ஒரு நிமிஷத்தில் தாம் அபாரமான பணக்காரராக மாறிவிட்டதை நினைத்தும் அவர்களிருவரும் கரைகடந்த பெருமை பாராட்டிக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/236&oldid=1252412" இலிருந்து மீள்விக்கப்பட்டது