உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

மேனகா

தெருவில் அவன் எதற்காக அந்த வீட்டிற்குள் நுழைந்திருப்பா னென்ற சந்தேகம் உண்டாயிற்று. அவன் ஒருவேளை பிச்சை கேட்கப்போய், ஏதாகிலும் நோட்டுகளை அபகரித்துக் கொண்டு வந்துவிட்டானோ என்னும் சந்தேகம் தோன்றியது. நான் அவனிடம் சென்று, “உள்ளே யாரைத் தேடிவிட்டு வருகிறீர்?” என்று கேட்டேன். அவன் தனக்கு அந்த வீட்டிலுள்ளவர்கள் அறிமுக மானவர்களென்றும், அவர்களிடம் ஒரு காரியமாக வந்து விட்டுப் போவதாயும் கூறினான். நான் உடனே அவனை என்னுடன் கூட அழைத்துக் கொண்டு உட்புறம் சென்றேன். அங்கே உங்களுடைய சகோதரிகளும் சாமாவையரும் இருந்தனர். அந்த முகம்மதியன் யாவனென்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அவன் யாவரோ பிச்சைக்காரன் என்றும், அவனைத் தங்களுக்குத் தெரியா தென்றும் சொல்லிவிட்டனர். என்னுடைய சந்தேகம் பெருத்த சந்தேகமாக மாறிவிட்டது. நான் உடனே அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய், அவனுடைய மூட்டை முதலியவற்றைச் சோதனை செய்து பார்த்ததில், அவன் ஒரு மந்திரவாதி என்பது வெளியாயிற்று. உங்களுடைய வீட்டிலிருந்து வந்தபோது அவன் சட்டைப் பையில் மறைத்துக் கொண்ட காகிதம் என்ன வென்று எடுத்துப் பார்த்தேன். அதில் இரண்டு கடிதங்கள் அகப்பட்டன. அந்தக் கடிதங்களை நாங்கள் படிக்கக்கூடாதென்று அவன்தடுத்தான். அதனால் என்னுடைய சந்தேகம் மிகவும் அதிகரித்தமையால், நான் அந்த இரண்டு கடிதங்களையும் உடனே படித்துப் பார்த்தேன். ஆகா! அவைகளைப் படித்தவுடன் என்னுடைய மனதில் உண்டான ஆச்சரியம் சொல்லிலடங்காததாய் விட்டது. அந்த இரண்டு கடிதங்களையும் இத்துடன் கோர்த்து உங்களுடைய பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன். இரண்டு கடிதங்களிலொன்று, அங்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ஜவுளி வர்த்தகம் நைனாமுகம்மது மரைக்காயரால் அவருடைய குமாஸ்தாவான உங்கள் அண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/259&oldid=1252435" இலிருந்து மீள்விக்கப்பட்டது