பக்கம்:மேனகா 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

25

மேனகாவிற்கு பதிலாக வரப்போகும் நாட்டுப்பெண் பங்கஜவல்லியின் அழகு, குணம் முதலியவற்றையும் அறிந்துகொள்ள, நமது வாசகர்கள் அவாவுவது இயற்கையே. ஆகலின், அவர்களைக் குறித்த சில விவரங்களை இங்கு கூறுவது அவசியமாகிறது.

கும்பகோணத்திற்கு அருகில் ஒடும் கொள்ளிட மென்னும் ஆற்றங்கரையின் மீது கோடாலிக் கறுப்பூர் என்று ஒரு சிறிய ஊரிருக்கிறது. அதுவே நமது சாமாவையர் திருவவதரித்த புண்ணிய ஸ்தலமாகும். அந்த ஸ்தலத்தில் வரதாச்சாரியார் என்னும் பெயரைக் கொண்ட ஒரு சீமானிருந்தார். அவருக்கும் சாமாவையருக்கும் இரகசியமான பல காரணங்களால், ஆழ்ந்த நட்பு ஏற்பட்டு நெடுநாளா யிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. அந்த வரதாச்சாரியாரே இப்போது வராகசாமிக்கு இரண்டாவது மாமனாராக வர விருப்பங்கொண்டவர். அவரை பெரிய அகத்து (வீட்டு) வரதாச்சாரி என்று யாவரும் அழைப்பது வழக்கம். அவரது முன்னோர் மிகுந்த செல்வவந்தராயும், ஏராளமான விலையுயர்ந்த நிலம், கால் நடைகள் முதலியவற்றை உடையோராயும், அவ்வூருக்கே தலைவராயும், ஆசார ஒழுக்கங்களில் இணையற்றவராயும் இருந்தனராம். அவ்வளவு பெருத்த செல்வமும், அவரது பாட்டனார் காலத்திலேயே, “செல்வோம்” என்று சொல்லிக் கொண்டு போய்விட்டதாம். அவர் கும்பகோணத்தில் தனலட்சுமி என்ற ஒரு அழகிய தாசியினிடம் சரணம் புகுந்தமையால், அவரது வீட்டிலிருந்த தனலட்சுமியும் கும்ப கோணத்திற்குப் போய்விட்டாள். அவளிடம் அவருக்கிருந்த ஆசையை இவ்வளவு அவ்வளவென்று அளவிட்டுக் கூறுதல் முடியாத காரியம். அவரது கடைசிக் காலம் வரையில் அந்த மோகம் அதிகரித்துக் கொண்டே வந்ததன்றி அது ஒரு சிறிதும் குறையவில்லை. தாம் இறக்குந் தருணத்தில் அவளது மடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/27&oldid=1251840" இலிருந்து மீள்விக்கப்பட்டது