உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

மேனகா

என்னுடைய உயிரையும் ஒழித்து விடுகிறேன்” என்று மிகுந்த ஏக்கத்தோடு கூறினான். அதைக் கேட்ட பெண்ணரசி திரும்பவும் அவனைத் தேற்ற ஆரம்பித்தாள், “நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! உங்களுடைய ஜாதியில் புருஷன் இறந்தால், பெண்கள் மறு கலியாணம் செய்து கொள்ள முடியாது. ஆகையால் அவர்கள் விசனப்படுவது நியாயமே. நீங்களோ புருஷ சிங்கம். ஆயிரம் மனையாட்டிகள் வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளலாம். உங்களுடைய சம்சாரம் மிகவும் நற்குணமுள்ளவள் என்பது, நீங்கள் சொல்லுவதிலிருந்து நன்றாக வெளியாகிறது. அவள் அநியாயமாக வஞ்சிக்கப்பட்டு, அதனால் தற்கொலை செய்து கொண்டது சகிக்க முடியாத துக்க சங்கதிதான். அதைப்பற்றி சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் அதன் பொருட்டு, உயிரை விட்டுவிடுவதாகச் சொல்லுவது சரியல்ல. உலகத்தில் அவள் ஒருத்திதானா நற்குண முடையவள்? அழகுடையவள்? ஈசுவர சிருஷ்டியில் எவ்வளவோ அற்புதமான அமைப்புகள் இருக்கின்றன. ஒருத்தியை ஒருத்தி மீறிய அழகும், நற்குணமும், வாய்ந்த ஸ்திரீ ரத்னங்கள் கோடாது கோடியாக உலகில் நிறைந்திருக்கின்றனர். மேனகாவோடு சுகித்திருக்க இவ்வளவு தான் கொடுத்துவைத்த தென்று நீங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, சிறந்தவளாகப் பார்த்து இன்னொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ்வதே சரியான காரியம். உலகத்தில் சாவும் வாழ்வும் ஒவ்வொரு நாளும் ஏற்படும் விஷயம்; அதை மகா கொடிய ஆபத்தைப் போலவும், எங்கும் நடக்காத அசம்பாவிதமான தீங்கைப் போலவும் மதித்து அதற்காக நாமும் உயிரை விடுவது உலக வழக்கத்தில் சேர்ந்ததல்ல. இந்த விஷயத்தில் உங்களுடைய முக்கியமான சந்தேகம் நிவர்த்தியாகி விட்டது. அவள் மனதார தானே வீட்டை விட்டுப் போகவு மில்லை; அவளுடைய கற்பும் கெடவில்லை. அவ்வளவோடு நீங்கள் திருப்தி அடையுங்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/277&oldid=1252453" இலிருந்து மீள்விக்கப்பட்டது