உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மேனகா

அவர் தமக்கு மாதம் ஒன்றுக்கு ரூபா 500- சம்பளமென்றும் அந்தக் கம்பெனியில் ஜனங்கள் பணத்தொகைகளை வட்டிக்குக் கொடுத்தால் நூற்றுக்கு இரண்டு வட்டி கிடைக்கு மென்று சொல்லிக்கொண்டு வந்தார். அவர், அவருடைய மனைவி ஆகிய இருவரின் வெளிப்பகட்டைக் கண்டு பலர் ஏமாறிப் போய், தாம் எவ்வளவோ பாடுபட்டு நெடுங்காலமாய்ச் சேர்த்து வைத்திருந்த பணங்களை அவரை நம்பி அவரிடம் கொடுத்திருந்தனர். அவர்கள் இரகசியமாகச் சேர்த்து வைத்திருந்த சிறுவாடுகளை வரதாச்சாரியார் சென்னைக்கு அனுப்பாமல் தாமே பலகாரம் செய்துவிட்டு அவர்களுக்கு வட்டிப்பணத்தை மாத்திரம் காலத்தில் கொடுத்து எண்ணிறந்த ஏழைகளை வஞ்சித்து தமது வயிற்றை வளர்த்து வந்தார்.

நமது சாமாவையர் இவருடைய பெண்ணைத்தான் வராகசாமிக்குக் கட்டிவிட நினைத்து, இவரைப் பற்றி பெருந்தேவியம்மாள் கோமளம்மாள் ஆகிய இருவரிடமும் இந்திரன் சந்திரன் என்று பெரிதும் புகழ்ந்து கூறி அவர்களை ஏமாற்றிக்கொண்டு வந்தார். இவரிடத்திற்கே சாமாவையர் இப்போது வந்து சேர்ந்தார்.

சாமாவையர் வந்து உள்ளே நுழைந்த சமயத்தில் வரதாச்சாரியார், ஒரு தோசைக்காரக் கிழவி நாற்பது வருஷ காலமாக இடியாப்பம் சுட்டு விற்றுச் சேர்த்து வைத்திருந்த தொகையான ரூபா ஐந்நூறை அவளிடத்திலிருந்து அபகரித்துக் கொண்டிருந்தார். அவள் அவ்வளவு பெருத்த தொகையை எவ்வித தஸ்தாவேஜு மில்லாமல் அவரை நம்பி அவரிடம் கொடுப்பதைப் பற்றி ஒரு சிறிது அஞ்சி பணத்தைக் கொடுக்கத் தயங்கியிருந்த தருணத்தில் சாமாவையர் ஒரு பெருத்த சாவகாரி வருவதைப்போல ஆடம்பரமாக உள்ளே நுழைந்தார். அவரைக் கண்ட வரதாச்சாரியார் எழுந்து மரியாதையாகவும் அன் போடும், “வாருங்கள் வாருங்கள்” என்று கூறி வரவேற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/34&oldid=1251847" இலிருந்து மீள்விக்கப்பட்டது