உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

69

அவ்வாறு பல ஊர்கள் சென்றன. அவரது ஆசையும் நிராசையானது; கடைசியில் மனமுடைந்தவராய் கமலத்தை அழைத்துக் கொண்டு, கீழிறங்கி வேறு வண்டியில் ஏறிக்கொள்ள நினைத்து, அவளை நோக்கி, “நாம் வேறே வண்டிக்குப் போகலாமா?” என்று தாழ்ந்த குரலில் இரகசியமாகக் கேட்க அவள், “திருவாரூர் வந்துவிட்டது. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வீட்டுக்கே போய்விடுவோம்” என்று இரகசியமாக மறுமொழி கூறினாள். அதற்குமேல் எதையும் சொல்ல அறியாமல் சாமாவையர் ஒய்ந்து கண்மூடிக்கோட்டானைப் போல உட்கார்ந்திருந்தார். கமலம் தனது தாயிடத்தில் அச்சங்கொண்டவளாகத் தோன்றவில்லை. அன்னிய மனிதராகிய தம்மை, அவளறிய, வீட்டில் படுக்க வைத்து உபசரிப்பதென்றால், கமலம் தாசியாகத்தான் இருக்கவேண்டு மென்று அவர் நினைத்தார். அவளோடு இரண்டு மூன்று நாட்கள் உல்லாசமாக இருந்துவிட்டு, அவள் தம்மோடு வர விரும்புவாளாகில், அவளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்குப் போகத் தீர்மானித்துக் கொண்டார். எப்போது திருவாரூர் வரும் வருமென்று வழிபார்த்துக் கண்களும் மனதும் புண்ணாயின; மேனி பசத்தது; அவர் நரக வேதனை யடைந்தவராய் உட்கார்ந்திருந்தார்.

ஆயிரங்காத தூரத்திற்கப்பால் இருப்பதாய்த் தோன்றிய திருவாரூரும் வந்தது. சனியன் பிடித்ததைப்போல் அது வரையில் அவர்களுக்கருகில் உட்கார்ந்திருந்த மனிதனும் இறங்கிச் சென்றான். எவ்விடத்திலோ மறைந்து கிடந்த சந்தோஷமும் சாமாவையரது வதனத்தில் தோன்றி நடனம் செய்தது. பழைய உற்சாகமும், மோகாவேசமும், ஒன்றிற்கு நூறுமடங்காய்ப் பெருகி யெழுந்து சாமாவையரது மனத்திலும் தேகத்திலும் மிகுந்த சுறுசுறுப்பையும், துடிதுடிப்பையும் உண்டாக்கின. கமலத்தின் முகமும் கமலத்தைப் போலவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/70&oldid=1251907" இலிருந்து மீள்விக்கப்பட்டது