உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மேனகா

மலர்ந்து இனிமையையும், குளிர்ச்சியையும், மகிழ்ச்சியையும், புன்னகையையும் சொரிந்து, ஐயரது மனதில் புதிய நம்பிக்கையையும் பெருங்களிப்பையும் அடங்கா மோகத்தையும் கிளப்பின.

இருவரும் வண்டியை விடுத்துக் கீழிறங்கினார்கள். ஐயர் தமது பணப்பையை ஒரு கையிலும், கமலத்தின் பெட்டியை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டார். அவளையே தோள் மீது தூக்கிக் கொள்ளவும் அவருக்கு விருப்பமே! ஆனால், பெண்ணரசி அதற்கு இணங்கமாட்டா ளென்று நினைத்து, அதைப் பிரரேபிக்காமல் விடுத்தார். அவர் பெட்டியை எடுத்த போதே, அவள், “வேண்டாம்; வேண்டாம்; கூலியாளை அமர்த்தலாம்” என்றாள். “இது எவ்வளவு பெரிது! இதற்காகக் கூலியாள் பார்த்துக்கொண்டு இங்கே உட்கர்ந்திருப்பதேன். வா போகலாம்” என்று அதை எடுத்துக் கொண்டு புறப்பட, அவளும் மயில் அடி பெயர்த்து வைப்பது போல நடந்து அவரைத் தொடர்ந்தார்.

“அவருக்கு அவளே இணை, அவளுக்கு அவரே இணை” என்று கூறத்தகுந்தவாறு இருவரும் மணப்பந்தலில் அமரப்போகும் சதிபதிகளைப் போல அழகு நடை நடந்து மன்மதனும் இரதியும் உலாவிப் பவனி வருவதைப்போலச் சென்று ஸ்டேஷனை விடுத்து வெளியேறினர். வெளியில் குதிரை வண்டிகள் பல ஆயத்தமாக நின்றன. வண்டிக்காரர்கள், வருவோரின் மூட்டைகளையும், பெட்டிகளையும் பிடுங்க ஆரம்பித்தனர். ஒருவன் சாமாவையரது கையிலிருந்த பெட்டியைப் பிடுங்கிக் கொண்டுபோய் தனது வண்டியில் வைத்துவிட்டு, “எஜமானே! இந்த வண்டியில் ஏறுங்கள். இதோ இருக்கிறது” என்று ஐயரையும், அம்மாளையும் உபசரித்து அழைத்துச் செல்ல, அவர்கள் அதில் ஏறிக் கொண்டனர். வண்டி புறப்பட்டது; சிறிது தூரத்திற்கப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/71&oldid=1251908" இலிருந்து மீள்விக்கப்பட்டது