பக்கம்:மேனகா 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மேனகா

கதவைச் சாத்தித் தாளிடாமல் வைத்துவிட்டு, கமலம் மிகவும் விரைவாகவும் அதிக உற்சாகத்தோடும் குதித்துக்கொண்டு ஓடிவந்து சாமாவையரை யடைந்து தனது அழகிய பல் வரிசைகள் வெளியில் தோன்றப் புன்னகை செய்து, “தங்களுக்கு போஜனம் ஆனதோ இல்லையோ?” என்று அன்போடு கேட்டாள். அவளது தோற்றம் நடையுடை பாவனை சொற்கள் முதலியவை சாமாவையரது மார்பில் ஆயிரம் மன்மத பாணங்களை ஒரேகாலத்திற் சொருகி அவர் மனதை மயக்கின. தேன் குடித்த நரியைப் போலிருந்த சாமாவையர் புன்னகை செய்து, “போஜனம் ஆய்விட்டது. வயிற்றில் பசியில்லை. மனப் பசிதான் பற்றி எரிகிறது” என்றார்.

அதைக் கேட்ட அந்த மோகனவல்லி கலகலவென்று நகைத்து மகிழ்வே உருவாய் மாறி, “அதற்குத் தகுந்த வைத்தியன் நானிருக்கிறேன். மருந்து செய்கிறேன்; பயப்படவேண்டாம்” என்று சொல்லியவாறு, அவர் வாங்கியிருந்த மிட்டாயி, பட்சணம், தாம்பூலம் முதலியவற்றை சாயத் தட்டுகளில் எடுத்து ஒழுங்காக வைத்து அதை ஒரு கையிலும், விளக்கை மற்றொரு கையிலும் எடுத்துக் கொண்டு, “வாருங்கள்; படுக்கை யறைக்குப் போவோம்” என்றாள். சுவர்க்க வாசலுக்கு அருகிலிருந்து அதற்குள் நுழையப் போகும் நிலைமையிலிருந்த சாமாவையர் மிகவும் துடிப்பாக எழுந்து அவளுடன் சென்றார். அவ்விருவரும் இரண்டோர் அறை களைக் கடந்து, மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருந்த அவளது சயன அறையை அடைந்தனர். அவ்வறை, வீட்டின் நடுப்பாகத்திலிருந்தது. அதன் ஒரு புறத்தில் உன்னதமான வில்வைத்த விலையுயர்ந்த பித்தளைக் கட்டிலொன் றிருந்தது. அதன் மேல் பிரமாண்டமான மெத்தை, திண்டுகள், தலையணைகள், கொசுவலை, அஸ்மானகிரி முதலியவை நிறைந்திருந்தன. தின்பண்டம், தாம்பூலம் முதலியவை வைப்பதற்கு கட்டிலுக்கருகில் ஒரு மேஜை கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/75&oldid=1251912" இலிருந்து மீள்விக்கப்பட்டது